மார்கழி மாதத்தில் கண்ணபிரானை போற்றி, 30 நாட்களும் 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஆண்டாள் இயற்றியுள்ளார். இருபத்து இரண்டாவது பாடல் மூலம் கூற வருவதை காண்போம்.


திருப்பாவை இருபத்து இரண்டாவது பாடல் விளக்கம்:


இறைவா, எங்களை விட வலிமையானவர்கள் யாரும் இல்லை என்று சொன்னவர்கள் எல்லாம், உன் திருவடியில் வந்து சரணடைந்தது போல, நாங்களும் உன் திருவடியில் வந்து சரணடைந்துவிட்டோம்.


சிறிய மணிக்குண்டுகள் வாய் திறந்திருப்பது போன்றும், தாமரை மொட்டு சிறிதாக மலர்வது போன்றும், உன் கண்களை சிறிதாக திறந்து எங்களை பார்ப்பாயாக...


சூரியன், சந்திரன் போன்ற உன் இரு கண்களால் எங்களை பார்த்தால், எங்களை பிடித்த பாவங்கள் எல்லாம் நீங்கி விடும். ஆகையால் கண்ணபிரானை எங்களுக்கு அருள் தருவாயாக என ஆண்டாள் தெரிவிக்கிறார்.


இப்பாடல் மூலம், தான்தான் பெரியவன், என்னை விட வலிமையானவர் யாரும் இல்லை என்ற அகங்காரம் இருக்க கூடாது என ஆண்டாள் குறிப்பால் சுட்டி காட்டுகிறார்.


திருப்பாவை இருப்பத்து இரண்டாவது பாடல் :


அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான


   பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே


சங்க மிருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்


   கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப்போல,


செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ


   திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்


அங்கணிரண்டுங்கொண் டெங்கள் மேல் நோக்குதியேல்


   எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்.


ஆண்டாள்:




கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் மிகவும் தமிழ் புலமை மிக்கவராக திகழ்ந்துள்ளார்.


பக்தி இயக்கம்:


கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். தமிழுக்கு பங்காற்றியதில், பக்தி இலக்கியங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.


மார்கழி மாதத்தில், கண்ணபிரானை வைத்து, இலக்கிய நயம் மிக்கதாகவும், உவமை- உருவகத்தை நேர்த்தியாகவும், தமிழை அழகுப்படுத்தி பாடல் அமைத்திருப்பதை காணும்போது, ஆண்டாளின் தமிழ் வளத்தை அறியலாம். 


தொடர்ந்து படிக்க: Thiruppavai 21: மார்கழி 21... இன்றைக்கான ஆண்டாளின் திருப்பாவை பாடல் இதுதான்!...


தொடர்ந்து படிக்க: Thiruppavai 4: மார்கழி 4ஆம் நாள்..." வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல" கண்ணனிடம் மழையை கேட்கும் ஆண்டாள்...வியக்க வைக்கும் அக்கால அறிவியல்….