திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
"குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்". தமிழ் கடவுள் முருகனுக்கு ஆறு படைவீடுகள் உள்ளது. அதில் முதல் வீடு என்னும் சிறப்பை பெற்றது, திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். முருகப் பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலம். திரு+பரம்+குன்றம். பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான். குன்றம் என்றால் குன்று ( மலை ). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழி. அறுபடை வீட்டு முருகப் பெருமான் கோயில்களில் இக்கோயில் அளவில் பெரியதாகும். இம்மலை லிங்க வடிவில் அமைந்துள்ள அருட் செறிந்த மலை. இந்தத் திருப்பரங்குன்றத்தில் தங்கி சிவசக்தியை நோக்கி ஆறுமுகப் பெருமான் தவமிருந்தார் என கூறப்படுகிறது. இப்படி பல்வேறு பெருமைகளை கொண்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது, இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா பிரசித்தி பெற்றது
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருப்பரங்குன்றம் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா பிரசித்தி பெற்றது. கார்த்திகை மாதம் பத்து நாட்கள் கொண்டாடப்படும் இந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு பால் சந்தனம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் கோயில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுப்பிரமணி யசுவாமி தெய்வானை முன்னிலையில் தர்பை புல், மாவிலை கொண்டு அலங்கரிக்கப்பட்ட கொடிகம்பத்தில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது.
சுப்ரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும்
விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்க மயில், வெள்ளி பூதவாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 12ஆம் தேதி சுப்ரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து 13 ஆம் தேதி காலையில் கார்த்திகை தேரோட்டமும், மாலையில் கோயிலில் பால தீபம் ஏற்றப்பட்டு மலைமேல் மகாதீபம் ஏற்றப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.
மேலும் ஆன்மீக செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - நவபாஷாண சிலைக்கு என்ன ஆனது..? - பழனி முருகன் கோயிலில் திடீர் ஆய்வால் பக்தர்கள் அதிர்ச்சி
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Pushpa 2 Twitter Review: நெருப்பா இல்ல ரெடி மேட் அடுப்பா! புஷ்பா 2 தப்பித்ததா? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம்!