பழனி மலைக்கோயிலில், ஓய்வுபெற்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையிலான சிலை பாதுகாப்பு கமிட்டியினர் நவபாஷாண சிலையை ஆய்வு செய்தனர். பிரம்ம சுத்தி யாகம் செய்து, கருவறைக்குள் நுழைந்து மூலவர் சிலையை ஆய்வு செய்தனர்.
உலகத் தமிழர்களின் முதற்கடவுள் முருக பெருமான் எனவும், தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆன்மீக ஸ்தலமாக விளங்குகிறது பழனி முருகன் கோவில். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலாகும்.
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
பழனி முருகன் கோயில் மூலவராக நவபாஷாண சிலை உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போகர் சித்தரால் நவ பாஷாணங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட மருத்துவகுணம் வாய்ந்த மூலவர் சிலையை பாதுகாக்கும் வகையில் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஓய்வு பெற்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையில் சிலை பாதுகாப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அவ்வப்போது பழனி கோயில் மூலவரான நவபாஷாண சிலையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பது வழக்கமாகும். இதன்படி இன்று ஓய்வு பெற்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையிலான நவபாஷாண சிலை பாதுகாப்பு குழுவினர் பழனி மலைக்கோயிலில் ஆய்வு செய்தனர்.
இன்று காலை 9 மணியளவில் பழனி மலைக்கோவிலுக்கு சிலை பாதுகாப்பு கமிட்டியினர் வருகை தந்ததை அடுத்து, பிரம்ம சுத்தி யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஸ்தபதி தட்சணாமூர்த்தி, கிளை பாதுகாப்பு குழுவினர் மற்றும் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் பழனி கோவில் கருவறைக்குள் சென்று நவபாஷாண சிலையை ஆய்வு செய்தனர். அப்போது சிலையின் உறுதித் தன்மை, சிலையின் திருமேனி ஏதேனும் சேதம் ஆகி உள்ளதா ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர்.
ஆய்வு முடிந்து வெளியே வந்த குழுவினர் தெரிவித்ததாவது: பழனி மலைக்கோவில் நவபாஷாண சிலை எனும் பல ஆயிரம் ஆண்டுகள் என்றும், சிலையில் எவ்வித விரிசல்கள் இல்லை என்றும் தெரிவித்தனர். சிலை உறுதி தன்மையுடன் இருப்பதாகவும், மேலும் ஐஐடி பேராசிரியர் முருகையா தலைமையிலான குழுவினர் தங்களது ஆய்வு அறிக்கையை தெரிவித்த பிறகு, ஆய்வறிக்கையை அரசிடம் சமர்ப்பித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
இந்த ஆய்வின் போது குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்ங மருதாச்சல அடிகளார், சிரவை ஆதீனம் மற்றும் ஐஐடி பேராசிரியர்கள், திருக்கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, முன்னாள் இணை ஆணையர் நடராஜன் மற்றும் திருக்கோவில் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சிலை பாதுகாப்பு குழுவினரின் ஆய்வால் மூன்று மணி நேரத்திற்கு மேலாக சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.