முருகப் பெருமான் சித்திரை மாதத்தில் மதுரையில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணம் காண மதுரை சென்று திரும்புவார்.

 

முருகப் பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலம்

 

"குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்". தமிழ் கடவுள் முருகனுக்கு ஆறு படைவீடுகள் உள்ளது அதில் முதல் வீடு என்னும் சிறப்பை பெற்றது, திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். முருகப் பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலம். திரு+பரம்+குன்றம். பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான். குன்றம் என்றால் குன்று ( மலை ). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழி. இத்திருத்தலம் மதுரை நகரிலிருந்து தென்மேற்கில் தேசிய நெடுஞ்சாலை வழியே 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து  ஏராளமான நகரப் பேருந்துகள் செல்கின்றன. பேருந்து நிறுத்தம் கோயிலுக்கு அருகிலேயே உள்ளது. அறுபடை வீட்டு முருகப் பெருமான் கோயில்களில் இக்கோயில் அளவில் பெரியதாகும். இம்மலை லிங்க வடிவில் அமைந்துள்ள அருட் செறிந்த மலை. இந்தத் திருப்பரங்குன்றத்தில் தங்கி சிவசக்தியை நோக்கி ஆறுமுகப் பெருமான் தவமிருந்தார் என கூறப்படுகிறது.

 


இத்தகைய இலக்கிய சிறப்பயும் பெற்றுள்ளது.

 


இக்குன்றமானது சிவலிங்க வடிவில் காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது.  இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார். சங்ககாலப் புலவரான நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறை நீக்கிக் கொண்ட திருத்தலம். அவர் பாடிய திருமுருகாற்றுப்படையில் இத்திருத்தலதின் பெருமைகளை கூறியுள்ளார். இத்தகைய இலக்கிய சிறப்பயும் பெற்றுள்ளது.

 

கண்டாலும் நீராடினாலும் பாவங்கள் நீங்கப்பெறும்

 

இத்தலத்திற்கு தண்பரங்குன்றம் , தென்பரங்குன்றம்  பரங்குன்றம், பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என பல்வேறு பெயர்களும் உண்டு. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் கருவறையில் ஐந்து குகைகள் மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. சுப்பிரமணிய சுவாமி சன்னதி, துர்கா தேவி சன்னதி, கற்பக விநாயகர் சன்னதி, சத்யகிரீஸ்வரர் சன்னதி, பவள கனிவாய் பெருமாள் சன்னதி ஆகிய 5 சன்னதிகள் உள்ளன. மலையடிவாரத்தில் கீழ்த்திசையில் சரவணப்பொய்கை அமைந்துள்ளது. இத்தீர்த்தம் முருகனின் கைவேலினால் உண்டானதென்றும் இத்தீர்த்தத்தைக் கண்டாலும் நீராடினாலும் பாவங்கள் நீங்கப்பெற்று விரும்பிய வரத்தைப் பெறுவர் என்று நம்பப்படுகிறது.

 

மீனாட்சி திருக்கல்யாணம் காண மதுரை சென்று திரும்புவார்.

 

சுப்பிரமணியருக்கு ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 15 நாட்கள் தேர் திருவிழா நடைபெறும். கொடியேற்றத் துடன் துவங்கும் இந்த திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கைபாரம் நிகழ்ச்சி, பவுர்ணமி பங்குனி உத்திரம் நடைபெறும். முக்கிய நிகழ்வாக பட்டாபிஷேகம், அதனை தொடர்ந்து திருக்கல்யாணம் மற்றும் தேர் திருவிழா நடைபெற்று தீர்த்தம் பூஜையுடன் திருவிழா நிறைவுபெறும் என்பது குறிப்பிடதக்கது. இத்தலத்து முருகப் பெருமான் சித்திரை மாதத்தில் மதுரையில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணம் காண மதுரை சென்று திரும்புவார். திருப்பரங்குன்றத்தில் உள்ள மற்றொரு குன்றான கூடுதட்டிப் பரம்பு எனும் குன்றின் மீது ஆண்டில் ஒருமுறை உற்சவமூர்த்தி சென்று விழாக்கோலம் காணுதலும் உண்டு. எனவே முருகப்பெருமான் - தெய்வயானை திருமணம் நடைபெற்ற தலமாதலால், திருமணம் செய்வோர், மணிவிழா செய்வோர் மட்டுமின்றி எல்லோரும் வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய முக்கிய தலம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலாகும்.