இந்து சமய அறநிலையத்துறை துறை சார்பில்,காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வைணவ திருத்தலங்களை தரிசிக்கும் வகையில், ஒருநாள் ஆன்மீக சுற்றுலா பயணத்தினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி இன்று கொடி அசைத்து வைத்து தொடங்கி வைத்தார்.


இந்து அறநிலைத்துறை முன்னெடுப்பு


தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சார்பில், மூத்த குடிமக்கள் தெய்வீகத் திருத்தலங்களை தரிசிக்கும் வகையில் சுற்றுலா பயணத் திட்டங்களை அறிவித்து வருகிறது. ஏற்கனவே காசி ஆன்மீக சுற்றுப்பயணம், அதனை தொடர்ந்து அறுபடை வீடுகள் தரிசனம், ஆடி மாதத்தில் அம்மன் திருத்தலங்களில் தரிசனம் என பல திட்டங்கள் மூலம் மூத்த குடிமக்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். 


 




 


கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த கோபுரங்களை கொண்ட கோவில்களுக்கு மன அமைதி வேண்டி முதிர்ச்சியோடு ஓய்வு நிலைக்கு வரும் மூத்த குடிமக்கள் பலர் மன அமைதி வேண்டி வருகை தருகின்றனர். இதில் பலர் முதிய காலத்தில் ஆன்மீக யாத்திரை செல்லவும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது அவர்களுக்கான கட்டணமில்லா ஆன்மீக பயணத்தை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை ஏற்பாடு செய்துள்ளது.


ஒரு நாள் ஆன்மீக சுற்றுலா


இந்நிலையில் மேலும் ஒரு திட்டமாக தமிழக அரசின் ரூ.50 லட்சம் நிதி உதவியுடன், புரட்டாசி மாதத்தினையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வைணவ திருத்தலங்களை தரிசிக்கும் வகையில், ஒரு நாள் ஆன்மீக சுற்றுலா பயணித்திட்டம் வகுக்கப்பட்டு இதில் 40 மூத்த குடிமக்கள் பயணம் செல்ல பதிவு செய்தனர்.




இதனைத் தொடர்ந்து இன்று முதல் புரட்டாசி சனிக்கிழமையொட்டி, வைணவ திருத்தல ஆன்மீக சுற்றுலா பயணத்தினை காஞ்சிபுரம் வைகுண்டப்பெருமாள் திருக்கோயில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியருடன் இணைந்து 40 ஆன்மீக சுற்றுலாப் பயணிகளும் வைகுண்டப் பெருமாளை தரிசனம் மேற்கொண்டு அவருடன் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.


எந்தெந்த கோவில்கள் ?


இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள், விளக்கொளி பெருமாள்,பாண்டவர் தூத பெருமாள், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் ஆகிய வைணவ திருத்தலங்களில் தரிசனம் மேற்கொண்டு இன்று மாலை 3 மணி அளவில் மீண்டும் காஞ்சியை வந்தடைவர். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கடேசன், திருக்கோயில் செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், ஆன்மீக பக்தர்கள் என பல கலந்து கொண்டனர். 




மேலும் இத்திட்டத்தில் புரட்டாசி மாதத்தில் நான்கு சனிக்கிழமைகளிலும், இந்த ஆன்மீக சுற்றுப்பயணத்தில் தமிழக முழுவதும் ஆயிரம் மூத்த குடிமக்களை அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு தொடர்ந்து ஆன்மீக பக்தர்களுக்காக இது போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருவது ஆன்மீக அன்பர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற தொடர்ந்து பல்வேறு வகையான, ஆன்மீக சுற்றுலாவிற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என இந்து அறநிலையத்துறைக்கு முதியவர்கள் கோரிக்கை வைத்தனர்.