புரட்டாசி மாதம் எப்போதும் பெருமாளுக்கு உரிய நாளாக இருந்து வருகிறது. புரட்டாசி மாதங்களில் இந்துக்கள் வைணவ கோயில்களுக்கு படையெடுப்பது வழக்கமாக உள்ளது .ஒருவரின் வாழ்வில் ஏற்றத்தையும், மாற்றத்தையும் தரும் புதன் பகவானுக்கே அதிபதியாக, அதிதேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு. அந்த புதன் பகவானின் அதிதேவதையான மகாவிஷ்ணுவை, புதன் அவதரித்த புரட்டாசி மாதத்தில் வழிபட்டால் வாழ்வில் உள்ள சங்கடங்களும், கஷ்டங்களும் நீங்கும் என்பது ஐதிகமாக உள்ளது.
காஞ்சிபுரம் திவ்ய தேசங்கள் ( Kanchipuram Divya Desam List )
அந்த வகையில், 108 வைணவ திருத்தலங்களில் உள்ள பெருமாளை வணங்கி வந்தால், வேண்டியது நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திருத்தலங்கள், 105 இந்தியாவிலும், ஒன்று நேபாளத்திலும், இரண்டு வானுலகிலும் உள்ளன. அந்த வகையில் காஞ்சிபுரத்தில், 15 திவ்ய தேசங்கள் அமைந்திருப்பது சிறப்பாக பார்க்கப்படுகிறது. ஏபிபி நாடு இணையத்தில், காஞ்சிபுரம் திவ்ய தேசங்கள் பற்றி முழு வரலாறுகளை பார்க்க உள்ளோம். அவ்வகையில் இன்று, திருக்கச்சி என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பற்றி தெரிந்து கொள்ள உள்ளோம்.
காஞ்சிபுரம் வரதராஜன் பெருமாள் கோயில் ( Kanchipuram Varadharaja Perumal Temple)
வைணவத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய கோயில்களுக்கு அடுத்ததாக சிறப்பு வாய்ந்த கோயிலாக பார்க்கப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில், 31 வது திவ்யதேசம் கோயிலாக உள்ளது. இக்கோயிலின் மூலவராக, தேவராஜ பெருமாள் - தாயார் சன்னதியில் பெருந்தேவி தாயார் ஆகியோர் காட்சியளிக்கின்றனர். உற்சவராக பேரருளாளன் உள்ளார்.
அத்திகிரி மீது
வரதராஜ பெருமாள் கோயில் சன்னதி அமைந்துள்ள இடம் அத்திகிரி என அழைக்கப்படுகிறது. மலை மீது காட்சி தருவதால் மூலவருக்கு மலையாளன் பெயரும் உண்டு. மூலவர் மலை மீது அமைந்துள்ளார் என்பதற்கு சான்றாக கர்பகிரகத்தின் நேர் கீழே குன்று குடைவரை கோவிலில் நரசிங்க பெருமாள் வீற்றுக்கிறார்.
நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் வரதராஜ பெருமாளை தரிசிக்க வேண்டும் 24 படிகள் ஏறி செல்ல வேண்டும். தமிழ்நாட்டில் பிற வைணவ கோயில்களில், எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது. இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிப்பது கூடுதல் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
அத்திவரதர்
வரதராஜ பெருமாள் கோவிலில் முன்பு மூலவராக இருந்த ஆதி அத்தி வரதர் சிலை. இப்பொழுது அனந்த சரஸ் குளத்தில் நீருக்கு அடியில் இருக்கிறார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர் வெளியே இருந்து மொத்தம் 48 நாட்கள் தரிசனம் தருவார். 48 நாட்கள் வெளியில் இருக்கும் அத்தி வரதர் முதல், 24 நாட்கள் சயன கோலத்திலும், அடுத்த, 24 நாட்கள் நின்ற கோலத்திலும் அருள்பாலிப்பார்.
தல வரலாறு கூறுவது என்ன?
ஒரு காலத்தில் பிரம்மா காஞ்சிபுரத்தில் யாகம் மேற்கொண்டு வந்தார். யாகத்திற்கு அவரது பத்தினி சரஸ்வதியை விடுத்து, சாவித்திரி மற்றும் காயத்ரியுடன் இணைந்து யாகம் செய்ததால் சரஸ்வதி கோபம் கொண்டார். வேகவதி நதியாக உருவெடுத்து சரஸ்வதி, யாகத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்தார். அப்போது பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்க யதோத்தகாரியாக வந்த பெருமாள் சரஸ்வதி நதியை தடுத்து நிறுத்தினார். அதன் பிறகு பிரம்மாவின் யாகத்தில் தோன்றிய பெருமாள் அவருக்கு காட்சி அளித்தார்.
யாகத்தில் இருந்து பெருமாள் தோன்றியதால் இப்போதும், உற்சவர் சிலையில் தீ தழும்புகள் இடம்பெற்றிருக்கும். அதன் பிறகு அத்தி மரத்தில் சிலை செய்து பிரம்மா வழிபாடு செய்தார். கேட்கும் வரங்களை தருபவர் என்பதால், வரதராஜ பெருமாள் என பெருமாளுக்கு பெயர் வந்தது என புராணங்கள் கூறுகின்றன.
வரதராஜ பெருமாளின் தரிசித்தால் பலன்கள் என்ன ?
கேட்கும் வரங்களை தருபவர் வரதராஜ பெருமாள். கல்வியில் ஞானம் பெறவும், ஐஸ்வர்யங்கள் பெறவும் வரதராஜ பெருமாளை வணங்கி வந்தால் பலன்கள் கிடைக்கும். வழக்குகளில் சிக்கி இருப்பவர்களுக்கு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வந்தால் தீர்வு கிடைக்கும். தனி சன்னதியில் காட்சியளிக்கும் பெருந்தேவி தாயாரை வணங்கி வந்தால், பெண்களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பெருந்தேவி தாயாரை வணங்கி வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.