தஞ்சாவூர்: ராமாயண காலத்தில் வாழ்ந்த சுக்ரீவன், வணங்கி வழிபட்ட தலமே தென்குரங்காடுதுறை என்னும் ஆடுதுறை ஸ்தலம் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க...!


தென்குரங்காடுதுறை என்னும் ஆடுதுறை ஸ்தலம்


ஆபத்து காலத்தில் ஆண்டவனை நினைப்பது மனிதர்களின் இயல்பான குணம். இது உலக உயிர்களின் இயல்பும் கூட. இதுபோன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ராமாயண காலத்தில் வாழ்ந்த சுக்ரீவன், வணங்கி வழிபட்ட தலமே தென்குரங்காடுதுறை என்னும் ஆடுதுறை ஸ்தலம். இங்கு அமைந்துள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் காவிரியின் தென்கரையில் இருக்கும் 31-வது திருத்தலம் என்பது குறிப்பிடத்தக்கது.




துரைமூர்நாடு என்று அழைக்கப்பட்டதாக கூறும் கல்வெட்டுக்கள்


இவ்வூர் சோழ மன்னர்களின் ஆட்சி காலத்தில் பூபாளகுலவள்ளி வளநாடு, துரைமூர்நாடு என்று அழைக்கப்பட்டதாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் மற்றும் வள்ளலாரால் பாடப்பெற்ற பெருமைக்குரிய ஆலயம் இதுவாகும். இத்தல இறைவனின் திருநாமம் ஆபத்சகாயேஸ்வரர், இறைவியின் பெயர் பவளக் கொடியம்மை என்ற பிரபாளவள்ளி. தீர்த்தம் சூரிய தீர்த்தம் மற்றும் சகாய தீர்த்தம் ஆகும்.


ராமாயண காலத்தில் கிஷ்கிந்தை நாட்டை ஆட்சி செய்த வானர அரசன் வாலி. இவரது சகோதரன் சுக்ரீவன். வாலிக்கும் மாயாவி என்ற அசுரனுக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது குகைக்குள் ஒளிந்து கொண்ட அசுரனை பிடிக்க சென்ற வாலி ஒரு ஆண்டுகாலம் முடிந்த பின்னரும் வெளிவரவில்லை. அவ்வப்போது அபயக்குரல் கேட்பதும், ரத்தம் வெளிவருவதுமாக இருந்ததால், வாலி கொல்லப்பட்டிருக்கலாம் என்று சுக்ரீவன் கருதினான்.


இதனால் தன் சகோதரனைக் கொன்றவன் வெளியே வரக்கூடாது என்பதற்காக குகையின் வாசலை ஒரு பெரும் பாறையால் மூடிவிட்டு, கிஷ்கிந்தைக்கு திரும்பினார். பின்னர் சுக்ரீவனுக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. சில மாதங்களுக்கு பின்னர் வகையில் வாலி உயிருடன் வந்து நின்றார். குகை வாசலை மூடிவிட்டு ராஜ்ஜியத்தை கைப்பற்றியதாக சுக்ரீவன் மீது குற்றம் சாட்டி, அவனை நாட்டை விட்டே வெளியேற்றினார்.


பிராயசித்தம் தேடிய சுக்ரீவன்


தன் தவறான அனுமானத்தால், அண்ணனுக்கு தீங்கு இழைத்து விட்டதாக கருதிய சுக்ரீவன், அதற்கு பிராயசித்தம் தேடியும், அண்ணனால் தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கவும், சிவபெருமானை வேண்டினார். தன்னை சரணடைந்த சுக்ரீவனை, அன்னப் பறவையாக உருமாற்றி வாலியிடம் இருந்து காப்பாற்றி அருள்புரிந்தார் ஆடுதுறை ஈசன். இதனால் அவர் ‘ஆபத்சகாயேஸ்வரர்’ என்று அழைக்கப்பட்டார் என்று தல புராணம் கூறுகிறது. ஆபத்திலிருந்து காத்த இத்தல சிவபெருமானை வழிபட்டால், நமக்கும் இன்னல்கள், அச்சுறுத்தல்களில் இருந்து விடுபட உதவுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.


ஆடுதுறையில் ஆனந்த தாண்டவம்


தில்லை திருத்தலத்தில் பதஞ்சலி முனிவருக்காகவும், வியாக்கிர பாதருக்காகவும் ஆனந்த திருநடனத்தை ஆடிக் காண்பித்ததுபோல்  தேவர்களும், பிற முனிவர்களும் வேண்டியதால் ஆடுதுறையிலும் ஆனந்த தாண்டவத்தை ஆடி அருளினார் ஈசன். எனவே நடனக் கலையில் சிறந்து விளங்க விரும்புவோர், சிதம்பரம் நடராஜரை வழிபடுவது போல, இத்தல இறைவனையும் பிரார்த்திக்கலாம் என்று நம்பிக்கை உள்ளது.


3 நிலை ராஜ கோபுரத்துடன் கூடிய கோயில்


இக்கோயில் கிழக்கு நோக்கி 3 நிலை ராஜகோபுரத்துடனும், 2 பிரகாரங்களுடனும் விளங்குகிறது. கோபுர வாசலைக் கடந்து சென்றால், கொடிமரத்து விநாயகரையும், பலிபீடத்தையும், சிறு மண்டபத்துக்குள் உள்ள நந்தியையும் காணலாம். மண்டபத்தின் தென்புறச் சுவரில் இத்தலத்தின் தேவாரப் பதிகங்களும், திருப்புகழ்ப் பாடல்களும் வடிக்கப்பட்டுள்ளது.


இரண்டாவது வாசலின் முன்பாக நின்று நிமிர்ந்துப் பார்த்தால் சுக்ரீவன் சிவபூஜை செய்வதும், சுக்ரீவனை இறைவன் அன்னப் பறவையாகவும், அவன் தேவியை பாரிஜாத (பவளமல்லிகை) மரமாகவும் உருமாற்றி அருளிய தல வரலாற்றுக் காட்சி சுதை சிற்பமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு வலதுபுறம் தெற்கு நோக்கிய தனி சன்னிதியில் அம்பாள், தேஜஸ்வினியாக காட்சியருளிக்கிறார். வடகிழக்கு மூலையில் நாகர், சொர்ண காலபைரவர், சூரியர், சனி பகவான், பாணலிங்கம், ஹரதத்தர், நவக்கிரகங்கள் இடம் பெற்றுள்ளன.


கருவறை கோட்டத்தின் தென்புறம் கோஷ்ட கணபதி, நடராஜர், அகத்தியர், சிவன் (இவர்கள் நால்வரையும் பூஜிக்கும்) ராணி செம்பியன் மாதேவி சிற்பம். மற்றும் தட்சிணாமூர்த்தியும் இடம் பெற்றுள்ளனர். மேற்குபுறம் அண்ணாமலையார், (இவரை பிரம்மாவும் விஷ்ணுவும் வழிபடுகின்றனர்). வடபுறம் பிரம்மா, சிவனை வழிபடும் காரைக்கால் அம்மையார், எட்டுத் திருக்கரங்களோடு அருளும் துர்க்கா தேவி, கங்கா விசர்சன மூர்த்தி, பைரவ மூர்த்தி உள்ளனர். கருவறையின் முன் நந்தியம்பெருமானை பார்த்து புன்னகைத்தவாறு ஆபத்சகாயேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.


இவ்வாலய முருகப்பெருமான் சிறப்புக்குரியவர். அருணகிரிநாதரால் பாடப்பெற்றவர். சுவாமியின் கருவறைச் சுற்றிலுள்ள அண்ணாமலையாரின் கண்களும், முருகப்பெருமானின் கண்களும் சமதளத்தில் நேருக்கு நேராக சந்திப்பது வேறு எந்த ஆலயத்திலும் காணமுடியாத காட்சியாகும். இக்கோயில் அறநிலையத் துறையால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. இக்கோயிலுக்குச் செல்ல மயிலாடுதுறை மற்றும் கும்பகோணம் ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.