தஞ்சாவூர்: கர்ப்பிணி பெண்களின் வேண்டுதல் என்னவாக இருக்கும். சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்பதுதான் முக்கிய வேண்டுதலாக இருக்கும். அப்படியே சுகப்பிரசவம் நடக்க அருள் புரிகிறார் தஞ்சை மாவட்டம் திருக்கருக்காவூரில் எழுந்தருளியுள்ள கர்ப்பரட்சாம்பிகை அம்மன். இக்கோயிலுக்கு வரும் வெளியூர், வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநில பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த கோடையில் சுற்றிப்பார்க்கவும், இந்த கோயிலின் பெருமையை அறிந்து கொள்ளவும் சென்று பாருங்கள்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளுடன் மூவர் தேவாரத்தையும் பெற்று மக்கள் பலரும் நாளும் வந்து தம் காரிய சித்தியை அடையும் தலமாக விளங்குகிறது திருக்கருகாவூர் கோயில்.

இத்தலம் நம் நாட்டின் சிறப்பில் முதலிடம் பெற்று விளங்கும் 275 தேவாரத் தலங்களில் ஒன்று. தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசத்துக்கு தெற்கே 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகையை வேண்டி வழிபடும் பெண்களுக்கு கருச்சிதைவோ, பிரசவத்தீங்கோ உண்டாவதில்லை. உண்மைதாங்க. அதைப்பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

திருக்கருகாவூரில் கர்ப்பரட்சாம்பிகை ஆலயத்தில் சுவாமி கோவிலுக்கு வடபாகத்தில் நந்தவனம் உள்ளது. அந்த நந்தவனத்தை அடுத்து அன்னை கர்ப்பரட்சாம்பிகையின் சன்னதி அமைந்துள்ளது. இந்த ஆலயம் அமைதியின் உறைவிடமாக திகழ்கிறது.

நந்தவனத்திற்கு தென்கிழக்கில் கௌதமேசுவரர் லிங்கம் அமைந்துள்ளது. கவுதம முனிவரால் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்டதால் சுவாமி இத்திருப்பெயரோடு விளங்குகிறார். இவரது சன்னதிக்கு எதிரில் அன்னையின் கோவில் அமைந்துள்ளது.





கருவறைக்குள் உயரிய பத்ம பீடத்தின் மீது அன்னை கர்ப்பராட்சாம்பிகை எழுந்தருளி அருள்பாலிக்கிறார். தன்னைத் தேடி வரும் ஒவ்வொருவருக்கும் திருவருளைத் திருநயன நோக்கினால் பொழிகிறார். அன்னையின் திரு உருவம் வேண்டுவோர் வேண்டுவதை யெல்லாம் வழங்கும் கற்பகத் தருவினும் மேலானது. அமைதியான திருமுகம். அரும்பும் புன்னகை அமைந்த உதடுகள்.

காண்போரின் கல் மனதையும் கரைத்து காலடியில் வீழ வைக்கும் கருணை கண்கள். எல்லா செயல்களையும் தனது பாதங்களினாலேயே செய்தருளும் ஆற்றல் பெற்ற கமலமலர்ப் பாதங்கள். அன்னையின் எழில் உருவத் திருமேனியின் அழகே அழகு!

அன்னையின் திருக்கரங்கள் நான்கினுள் வலக்கரம் அபயமளிக்கின்றது. இடக்கரம் கருச்சிதைவைத் தடுப்பது போன்று வயிற்றின் கீழே அமைந்துள்ளது. மேல்நோக்கி உயர்த்திய மற்றொரு வலக்கரம் அக்க மாலையையும், மற்றொரு இடக்கரம் தாமரை மலரையும் பிடித்துள்ளன.

அன்னை கர்ப்பரட்சாம்பிகை தன்னை வழிபடும் பெண் கர்ப்பத்தால் உண்டாகும் தீமையும், பிற தீமைகளும் அணுகா வண்ணம் காத்தருளுகின்றார். அன்னையின் சன்னதியில் ஆமணக்கு எண்ணெய் மந்திரித்து கருவுற்ற பெண்களுக்கு வழங்குவர். இத்தலத்தில் கர்ப்பரட்சாம்பிகையை வேண்டி வழிபடும் பெண்களுக்கு கருச்சிதைவோ, பிரசவத் தீங்கோ உண்டாவதில்லை. அன்னையின் சன்னதியில் உள்ள படிகளை நெய்யால் மெழுகித் கோலமிடும் பெண்களுக்கு திருமணம் தவறாது நடைபெற்று வருகிறது.

சன்னதியில் மந்திரித்து வழங்கப்படும் ஆமணக்கு நெய்யை, கருவுற்ற பெண்கள் தமது வயிற்றில் தடவினால் சுகப் பிரசவமாகும் என்பது பக்தர்கள் மற்றும் பெண்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.