தஞ்சாவூர்: 300 ஆண்டுகளுக்கும் மேலாக மொஹரம் பண்டிகையை தங்கள் இல்ல விழாவாக இந்துக்கள் கொண்டாடி சமூக நல்லிணக்கத்தை போற்றி வருகின்றனர். எங்கே என்று தெரியுங்களா?

இஸ்லாமியர்களின் ரம்ஜானுக்கு அடுத்தபடியாக புனித நாளாக மொஹரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரம்ஜானை போல் மொஹரம் பண்டிகையும் பிறை பார்க்கும் தேதியை பொறுத்து கொண்டாடப்பட்டு வருகிறது. மொஹரம் பண்டிகை கொண்டாடப்படும் நாள் முஹர்ரம்-உல்-ஹரம் என்றும் அழைக்கப்படுகிறது.

இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி, கடவுளின் தூதராகக் கருதப்பட்ட முஹம்மது நபி, முஹர்ரம் மாதத்தை 'அல்லாஹ்வின் புனித மாதம்' என்று அழைத்தார். 354 அல்லது 355 நாட்களைக் கொண்ட ஹிஜ்ரி நாட்காட்டியின்படி முஹர்ரம் மொஹரம் ஆண்டின் முதல் மாதம் ஆகும்.

இதனால் தான் மொஹரம் பண்டிகையும் இஸ்லாமியர்களின் முக்கிய கொண்டாட்டமாக உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது காசவளநாடு புதூர். இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் இந்துக்கள். இந்த கிராமத்தில் சாதி மத பேதம் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகையை காசவளநாடு மக்கள் விமர்சையாகக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தங்கள் இல்ல விழாவாக மொஹரம் பண்டிகையை இந்துக்கள் கொண்டாடி சமூக நல்லிணக்கத்தை போற்றி, கடைப்பிடித்து வருகின்றனர்.

அதன்படி, இன்று மொஹரம் பண்டிகையை மற்ற கிராமத்தைக் காட்டிலும் காசவளநாடு கிராம இந்து மக்கள் வழக்கம் போல் மிகுந்த உற்சாகமாக கொண்டாடினர். மொஹரம் பண்டிகை கொண்டாடுவதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே இந்துக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற விரதமிருந்து பயபக்தியோடு பண்டிகைக்கு தயாராகி வந்தனர்.





அதன்படி, இஸ்லாமியர்களின் பஞ்சா எனப்படும் கரகத்தை கிராமத்தில் உள்ள இந்துக்களின் வீடுகளுக்கு தாரை தப்பட்டையுடன் கொண்டு சென்றனர். அப்போது ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள மக்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற அந்த கரகத்திற்கு தண்ணீர் ஊற்றி எலுமிச்சை மாலை மற்றும் பட்டுத் துண்டு சாத்தி வேண்டிக் கொண்டனர்.

பின்னர் அங்குள்ள அல்லா கோவிலுக்கு கொண்டு வந்து பாத்தியா ஓதி தங்களது உறவினர்கள், பொதுமக்களுக்கு வழங்கினர். பின்னர் பஞ்சா கரகம் அங்குள்ள பூக்குழியில் இறங்கியவுடன் அல்லா சாமியை சுமந்து வந்தவர்கள் முதலில் தீ மிதித்தனர். பின்னர் மற்றவர்கள் தீ மிதித்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் திருநீறு, எலுமிச்சை பிரசதமாக வழங்கப்பட்டது.

மொஹரம் பண்டிகையை ஒட்டி காசவளநாடு கிராமமே திருவிழா கோலம் பூண்டிருந்தது. இதுகுறித்து காசவளநாடு புதூரைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், “இஸ்லாமியர்களின் பண்டிகையான மொஹரம் பண்டிகையை இந்துக்கள் அதிகம் உள்ள எங்களது ஊரில் எங்களது முன்னோர்கள் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து பாரம்பரியமாக 300 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் கொண்டாடி வருகிறோம்” என்றனர்.