ஆடி மாதம் என்றாலே பல்வேறு அம்மன் ஆலயங்களில் அதிகாலை நடை திறந்து சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.


 


 




இந்நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுங்ககேட் ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாத இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மூலவர் ஆதி மாரியம்மனுக்கு காலை பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மாலை மூலவர் ஆதி மாரியம்மனுக்கு பக்தர்கள் வழங்கிய திருமாங்கல்ய கயிற்றால் சிறப்பு அலங்காரமும் மாரியம்மன் முகத்திற்கு சந்தன காப்பு சாத்தப்பட்டு, ஆலயத்தின் பூசாரி சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டினார்.


 


 








 




 


ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுங்ககேட் ஆதி மாரியம்மன் திருமாங்கல்ய அலங்காரத்தைக் காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆதி மாரியம்மன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.


கரூரில் ஆடி வெள்ளியை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் 112 இளம் பெண்கள் மற்றும் சுமங்கலிகள் கலந்து கொண்ட குத்து விளக்கு பூஜை நடைபெற்றது.


அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபாவின் மாவட்ட மகளிர் அணி சார்பில் ஆடி வெள்ளியை முன்னிட்டு நான்காம் ஆண்டு குத்து விளக்கு பூஜை கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோவில் அருகில் உள்ள ஐயப்ப சேவா சங்க அன்னதான மண்டபத்தில் நடைபெற்றது. குத்துவிளக்கு பூஜையொட்டி அம்மனுக்கு காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.


 


 




 


உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் நடைபெற்ற இந்த குத்து விளக்கு பூஜையில் 112 சுமங்கலிகள் மற்றும் இளம் பெண்கள் கலந்து கொண்டு தாங்கள் கொண்டு வந்த குத்து விளக்குகளில், எள் எண்ணெய் ஊற்றி, திரியிட்டு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.


இதேபோல் கரூர் பசுபதிபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு வரலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வரலட்சுமி அலங்காரத்தில் ஜொலித்த அம்மனை தரிசித்தனர்.