தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுகோட்டை தாலுகா, அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட, காந்திநகர் முத்துக்குமாரசாமி கோவில் திருவிழா கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பால்குடம் மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக மண்ணப்பன் குளக்கரையில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்ட அக்கினி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் முத்துக்குமாரசாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் பட்டுக்கோட்டை தாலுகா அதிராம்பட்டினம் கரையூர் தெரு திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது திரௌபதி அம்மனுக்கு திருக்கல்யாணமும் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை ஒட்டி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது விழாவில் ஆயிரக்கணக்கான கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.





பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலில் உள்ள பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. துறவிக்காட்டில் அமைந்துள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோவில், உப்பு விடுதி சித்தி விநாயகர் கோவில் ஆகிய கோவில்களில் காவடி பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. இதைப்போல இடையாத்தி தங்கபால முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

திருச்சிற்றம்பலம் எமதர்மராஜன் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாக்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் பேராவூரணி அருகே வீரராகவபுரம் கிராமத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அன்னதானம் நடந்தது. கீரமங்கலம் அருகே நகரம் கிராமத்தில் உள்ள பாலசுப்ரமணியசாமி கோயிலுக்காக வீரராகவபுரம் கிராம மக்கள் சார்பாக வருடம் தோறும் அன்னதான விழா நடத்தப்படுகிறது.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கிராம மக்கள் அனைவரும் அன்னதானத்திற்கு தேவையான பொருட்களை வழங்கி சமையல் செய்து, வீரராகவபுரம், அம்மையாண்டி, ஏனாதிகரம்மை, பஞ்சநதிபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. முன்னதாக ஸ்ரீ வீரசக்தி விநாயகருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை வீரராகவபுரம் கிராமத்தினர் செய்திருந்தனர்.

வெட்டுவாக்கோட்டை செல்லியம்மன் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா திருவோணத்தை அடுத்துள்ள வெட்டுவாக்கோட்டை செல்லியம்மன் கோவில் பங்குனி திருவிழா நடைபெற்றது.

விழாவின் முதல் நாளில் பக்தர்கள் பால்அபிஷேகம் செய்தும், செடல் காவடி மற்றும் பால் காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.