தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சுப்ரமணியசாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழாவில் சூரசம்ஹாரம் நேற்றிரவு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதை ஒட்டி சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

Continues below advertisement

தஞ்சாவூர் பூச்சந்தை அருகில் இந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர் முருகன் என்று அழைக்கப்படும் பூக்காரத்தெரு அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடப்பது வழக்கம்,  அதேபோல் இந்தாண்டும் கந்த சஷ்டி திருவிழாவின் கடைசி நாளான நேற்று சூரனை சண்முகர்  வதம் செய்யும் காட்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது, 

Continues below advertisement

இதை முன்னிட்டு சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்லக்குகளில் எழுந்தருளி அரக்கனை நேர் எதிரே சந்தித்து சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. அப்போது சுவாமிக்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டது, இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

சஷ்டியின் 6ம் நாளான நேற்று 27ம் தேதி இரவு தஞ்சை பூக்கார தெருவில் எழுந்தருளி இருக்கும் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு இணையாக போற்றப்படும் இக்கோயில் பிரகாரத்தில் அரக்கனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது கோயிலில் திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி வழிபட்டனர். சூரசம்ஹாரம் முடிந்த உடன் 6 நாள் விரதம் மேற்கொண்டு இருந்தவர்கள் பானகம் பருகி தங்களின் விரதத்தை முடித்து கொண்டனர். 

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில்

முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 21-ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்றிரவு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சண்முகருக்கு சிறப்பு அபிஷேக மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து மாலை தாயார் மீனாட்சி அம்மனுடன் ஸ்ரீ சண்முக சுவாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் வந்து சக்திவேல் வாங்கி, கிழக்கு சன்னதியில் கஜமுக சூரன் மற்றும் சிங்கமுக சூரன் ஆகியோரை வதம் செய்தார். இதையடுத்து தெற்கு வீதியில் சூரபத்மனை வதம் செய்த சூரசம்கார நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது.

அப்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர். பக்தர்களின் விண்ணதிரும் கோஷத்திற்கு மத்தியில் சூரசம்கார நிகழ்வு நடந்தது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்கார நிகழ்வை முன்னிட்டு காலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருக்கல்யாண வைபவம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டை அருகே புத்தூர் ஸ்ரீ  சௌந்தரநாயகி சமேத புற்றிடங்கொண்டீஸ்வரர் ஆலயத்தில் கந்தசஷ்டி பெருவிழாவை முன்னிட்டு வள்ளி தேவசேனா, சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.  

திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு சுவாமி அம்பாளுக்கு பெண்கள் சீர்வரிசை தட்டு, தாம்பூலங்கள் எடுத்து கோயிலை வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு சகல சம்பிராதாயங்கள் நடத்தப்பட்டது. பின்னர் அக்னி ஹோமங்கள் வார்க்கப்பட்டு  ஆகமவிதிகள்படி சுவாமி சுப்பிரமணிய சுவாமிக்கும் அம்பாள் வள்ளி தேவசேனாவுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் 1000த்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டுகளித்து, சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாண வைபவத்திற்கான ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர், அறங்காவலர் குழுவினர் கிராம முக்கியஸ்தர்கள், மற்றும் கிராமவாசிகள் செய்து இருந்தனர்.