தமிழ் கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். முருகப்பெருமானுக்கு கந்தா, கடம்பா, கதிர்வேலா, பாலமுருகா என்று பல பெயர்கள் உள்ளது. அதேபோல, அவரை சேவற்கொடியோன் என்றும் பக்தர்கள் போற்றி வணங்குவார்கள். முருகப்பெருமானை சேவற்கொடியோன் என்று பக்தர்கள் போற்றுவதற்கும், சூரசம்ஹாரத்திற்கும் என்ன தொடர்பு? என்பதை கீழே காணலாம்.
சூரசம்ஹாரம்:
முருகப்பெருமானுக்கு சஷ்டி, கார்த்திகை, தைப்பூசம் என பல உகந்த நாட்கள் இருந்தாலும் சூரசம்ஹாரம் மிகவும் தனித்துவமானது ஆகும். புராணங்களின்படி, சூரபத்மன் எனும் அரக்கன் மக்களையும், தேவர்களையும் கொடுமை செய்து வதைதது வந்துள்ளான். அப்போது தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டுள்ளார். இதையடுத்து, சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து 6 தீப்பொறிகளாக முருகப்பெருமான் அவதரித்துள்ளார். கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்த கார்த்திகேயன் தாய் பார்வதி தேவியிடம் இருந்து வேல் பெற்றுள்ளார்.
சூரபத்மனுடனான போரின்போது சூரபத்மனின் சகோதரர்கள் சிங்கமுகன் மற்றும் தாரகன் இருவரையும் வதம் செய்து வெற்றி கண்டார். தருமகோபன், அக்கினிமுகாசுரன் உள்ளிட்ட சூரபத்மனின் படையின் வலிமை மிகுந்தவர்களையும் முருகன் வதம் செய்ய முருகப்பெருமானிடம் சூரபத்மன் போரிட்டான். ஆனால், முருகனை வெற்றி கொள்ள முடியாது என்பதை அறிந்த சூரபத்மன் கடலுக்கு அடியில் சென்று மரமாக உருமாறி மறைந்து கொண்டான்.
சேவற்கொடியோன்:
அப்போது, தனது வேலால் அந்த மரத்தை முருகப்பெருமான் இரண்டாக பிளந்தார். அதன் ஒரு பாதி சேவலாகவும், மற்றொரு பாதி மயிலாகவும் மாறியது. அவ்வாறு உருமாறிய மயில் முருகனின் வாகனமாகவும், சேவல் முருகனின் கொடியில் பொறிக்கப்பட்ட உருவமாகவும் மாறியது. இதன் காரணமாகவே முருகப்பெருமான் சேவற்கொடியோன் என்று பக்தர்களால் போற்றப்படுகிறார். இவ்வாறு புராணங்களில் கூறப்படுகிறது.
சேவல் சின்னத்தை கொடியாக கொண்ட இறைவன் என்பதே இந்த சேவற்கொடியோன் என்பதன் அர்த்தம் ஆகும். முருகப்பெருமானே சேவல் சின்னத்தை கொடியாக கொண்ட இறைவன் ஆவார். இன்று முருகப்பெருமான் சேவற்கொடியோனாக அவதரித்ததற்கு காரணமாக சூரசம்ஹாரம் நடக்கிறது. திருச்செந்தூர் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்களின் முன்பு இந்த சூரசம்ஹாரம் நடக்கிறது.
போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், முருகனின் மற்ற அறுபடை வீடுகளிலும் சூரசம்ஹாரம் இன்று நடக்கிறது. முருகன் கோயில்களில் காலை முதலே சிறப்பு தரிசனங்களும், வழிபாடுகள் நடந்து வருகிறது.
இந்த சூரசம்ஹாரத்தை காண திருச்செந்தூர் மட்டுமின்றி மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம் என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்துள்ளனர். திருச்செந்தூர் மட்டுமின்றி முருகனின் இதர அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, பழமுதிர் சோலை, திருத்தணியிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தர்களின் வசதிக்காக பல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மழைக்காலம் என்பதால் கூடுதல் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.