புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் கோயில், தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆவுடை கொண்ட பாண்டிய வரலாற்று ஆவணமாகத் திகழும் சிவன் கோயில் ஆகும். இது திருஞானசம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்றது. இக்கோயில் பற்றி ஆய்வு செய்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது,


புறநானூற்றில் மாங்குடிகிழார், மாவேள் எவ்வி என்ற சிற்றரசன் புனலம் புதவு, மிழலை, முத்தூறு ஆகிய ஊர்களை ஆட்சி செய்ததாக குறிப்பிடுகிறார். இதில் புனலம் புதவு என்பது பாம்பாறு கடலுக்குள் புகும் வாயில் என்ற பொருளில் திருப்புனவாயிலைக் குறிக்கிறது.


கருவறை லிங்கத்தின் ஆவுடை தமிழ்நாட்டின் மற்ற கோயில்களைக் காட்டிலும் சுற்றளவில் பெரியது. தஞ்சாவூர் பெரியகோயில் லிங்கம் 12.5 அடி உயரமும், ஆவுடை 55 அடி சுற்றளவும், கங்கைகொண்டசோழபுரம் லிங்கம் 13.5 அடி உயரமும், ஆவுடை 60 அடி சுற்றளவும் கொண்டது. திருப்புனவாசல் கோயில் லிங்கம் உயரம் 9 அடி இருந்தாலும், ஆவுடை 82.5 அடி சுற்றளவுடையது.




விமானத்தின் பிரஸ்தரத்தில் உள்ள கபோத நாசிக்கூடுகளில் மயில்மேல் ஆறுமுகன், பைரவர், காளி, காளைமேல் சிவன் உள்ளிட்ட அழகிய குறுஞ்சிற்பங்கள் உள்ளன. விநாயகர், அம்மன் சன்னதிகளின் மேற்கு தேவகோட்டத்தின் இருபக்கமும் விஷ்ணு, பிரம்மாவின் நின்றநிலையிலான சிற்பங்களும், வடக்கு தேவகோட்டத்தின் இருபக்கமும் கிரீத்துடன் இரு ஆண் பெண் அமர்ந்தநிலையிலான சிற்பங்களும் உள்ளன. இதேபோன்ற சிற்பங்கள் பைரவர் சன்னதியிலும் உள்ளன. இதில் கிரீடத்துடன் உள்ள இருவர் பரிவார சன்னதிகளைக் கட்டிய பாண்டிய அரசன், அரசியாக இருக்கலாம். இதில் அரசன் தாடியுடன் உள்ளார்.


கல்வெட்டுகள்


கல்வெட்டுகளில் இறைவன் பெயர் நாயனார் திருப்புனவாயிலுடைய நாயனார் எனக் குறிப்பிடப்படுகிறது. இவ்வூர் முத்தூற்றுக்கூற்றத்து கீழ்கூற்றில் இருப்பதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இங்கு இருந்த கி.பி.13-15-ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த 5 பாண்டியர் கல்வெட்டுகள் தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 8-ல் 209-213 வரையிலான வரிசை எண்ணில் மத்திய தொல்லியல் துறையால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.


முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் 13ஆம் ஆட்சியாண்டில், ஓரூருடையான் அழகிய மணவாளப் பெருமாளான காலிங்கராயர், தான் காராண்காணியாக அனுபவித்து வரும் முத்தூற்றுக்கூற்றத்து அரையாத்தூரை, இக்கோயில் இறைவனுக்கு தன் பெயரால் கட்டின காலிங்கராயன் சந்திக்கும், ஓரூரில் எழுந்தருளுவித்த இளையபிள்ளையார்க்கும் தேவதானமாக கொடுத்துள்ளார். இதில் சொல்லப்படும் ஓரூர் தற்போதைய ஓரியூர் ஆகும். தானம் கொடுத்த காலிங்கராயனும் ஓரூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரையாத்தூரில் உள்ள கருமாணிக்க விண்ணகர் எம்பெருமானுக்கு கொடுத்த நிலம் நீங்க உள்ள நிலம் தானமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்படும் குலசேகரத்தேவர் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் மகன் ஆவார். எனவே இக்கல்வெட்டின் காலம் கி.பி.1263 எனலாம்.




முதலாம் குலசேகரப் பாண்டியனின் மூத்த மகனான மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியனின் ஏழாவது ஆட்சியாண்டில் (கி.பி.1304), பதிபாதமூலப்பட்டுடைய பஞ்சாசாரிய தேவகன்மிகளுக்கும், சிரிமாயேசுரற்கும் மிழலைக்கூற்றநாட்டில் மஞ்சக்குடிப்பற்றில் ஏம்பலான கலியுகராமநல்லூர் தேவதானமாக விடப்பட்டுள்ளது. அவருடைய பதினான்காவது ஆட்சியாண்டில் (கி.பி.1311), பதிபாதமூலப்பட்டுடைய பஞ்சாசாரிய தேவகன்மிகளுக்கும், சிரிமாயேசுரக் கண்காணி செய்வாற்கும், வீரபாண்டியன் சந்திக்கும், மிழலைக்கூற்றத்து வித்தூர் பற்று ஆதூணியும் பற்றும் தானமாக கொடுக்கப்பட்டுள்ளது. இரு கல்வெட்டுகளிலும் பனையூருடையான் காலிங்கராயன் என்பவர் கையெழுத்திட்டுள்ளார்.


 


எம்மண்டலமுங்கொண்டருளிய மூன்றாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் 17வது ஆட்சியாண்டில் (கி.பி.1320) நிலம் மற்றும் மனைகள் விற்பனை செய்ததை தெரிவிக்கிறது. இவ்வூர் அணியாதித்தச் சதுர்வேதி மங்கலமாக இங்கு அகரம் நிறுவப்பட்டதை கல்வெட்டு தெரிவிக்கிறது. கி.பி.1417இல் விக்கிரமபாண்டியன் ஆட்சிக்காலத்தில் பூஜை மற்றும் திருப்பணிக்காக கோயிலுக்கு நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் ஓம்படைக்கிளவி விஜயநகர, நாயக்கர் கால அமைப்பில் உள்ளது. மதுரையில் வீழ்ச்சியடைந்த பின்னரும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாண்டியர் செயல்பட்டு வந்துள்ளதன் ஆதாரமாக இக்கல்வெட்டு உள்ளது.




முற்காலப் பாண்டியர்களால் கட்டப்பட்ட இக்கோயிலை பாண்டிய மன்னர்களில் பேரரசனான முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் தான் தற்போதுள்ள அளவில் பெரியதாக கட்டியிருக்கவேண்டும். இக்கோயிலில் இருப்பதில் பழமையானது அவனது கல்வெட்டுதான் என்பது அதை உறுதிப்படுத்துகிறது என்றார்.