பிள்ளையார்பட்டி அருள்மிகு ஶ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவில் விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக நடைபெற்ற திருத்தேரோட்ட விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.

 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உலகப் பிரசித்திபெற்ற பிள்ளையார்பட்டியில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் அதிகாலையிலிருந்து குவிந்தனர். குடைவரைக் கோயிலான இக்கோயில், சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டது. கற்பக விநாயகா் கோயில் தமிழ்நாட்டின் மிகப்பழமையான குகைக் கோயில்களுள் ஒன்றாகும். இங்கு விநாயகப்பெருமான் பிற இடங்களில் காணப்படுவதைப்போல நான்கு கைகளுடன் இல்லாமல் இரு கைகளுடன் காணப்படுகிறார்.




இங்கு மூலவா் கற்பகவிநாயகா் 6 அடி உயரத்தில் வலம்புரி நிலையில் காணப்படுகிறார். இந்த கோவிலில் காணப்படும் 15-க்கும் மேற்பட்ட கல்வெட்டுக் குறிப்புகள் இக்கோயிலின் தொன்மையை பறை சாற்றுகிறது. செப்டம்பா் மாதத்தில் நடைபெறும் விநாயகா் சதுா்த்தி விழாவே இங்கு நடைபெறும் பிரதான திருவிழா ஆகும். இந்நிலையில் இந்த ஆண்டு சதுர்த்தி விழா இக்கோயில் கோலாகலகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 10 ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.  பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி அன்று தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் குவிந்தனர். சதுர்த்தி அன்று கோயில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பஞ்சாங்க முறைப்படி சதூர்த்தி விழாவனது நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை 10 மணி வரை இருப்பதால் தீர்த்தவாரி நிகழ்ச்சி விநாயகர் சதுர்த்தி  இன்று நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.





மேலும் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு திரு தேரோட்ட விழா நடைபெற்றது.  இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியான ஒன்பதாம் திருநாளில் உற்சவர் கற்பக விநாயகர் பெரிய தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர். 



 

தெய்வங்களை தோளில் சுமந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர் பெருமானையும் ஸ்ரீ சண்டிகேஸ்வர ஸ்வாமியை சிறிய தேரிலும் எழுந்தருள செய்தனர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்று கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டவுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று சேர்ந்து தேரை வடம் படித்து இழுக்க தொடங்கினர். சிறிய தேரை பெண்களும் சிறியவர்களும் பின் தொடர்ந்து இழுத்து சென்றனர். தேர் மங்கள வாத்தியங்களுடன் பக்தர்களின் பக்தி கோசத்துடன் நான்கு ரத வீதிகளில் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது இவ்விழாவில் காரைக்குடி அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கற்பக விநாயகர் பெருமானை வழிபட்டனர்.