எண்ணிய செயல் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் மாற வணங்கப்படுபவர் முழு முதற்கடவுளான விநாயகப் பெருமான். ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. கோயில்களில் பால், நெய், தேன், தயிர், சர்க்கரை, பஞ்சாமிர்தம் என விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து  அலங்கரித்து சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பிள்ளையார் உருவங்களை களி மண்ணால் பிடித்தும், சிலைகள் நிறுவியும், மோதகம், சுண்டல் அவல், பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து அவரை வணங்கி மக்கள் மகிழ்கின்றனர்.  அதேபோல் இன்று ஒவ்வொரு வீடுகளிலும் களிமண்ணால் செய்த பிள்ளையார் சிலையை வாங்கிச் சென்று மூன்று கால பூஜை செய்து விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, பழங்கள் என பல்சுவை விருந்தை படைத்து வணங்குவர். அந்த வகையில் இன்று (செப்டம்பர் 18 ஆம் தேதி) பிள்ளையார் சதுர்த்தி மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.


பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிப்படுவது வழக்கமான ஒன்றாகும். காலத்திற்கு ஏற்ப விதவிதமான வித்தியாசமான விநாயகர் வடிவங்கள் இடம்பெரும். பாகுபலி விநாயகர், கொரோனா விநாயகர், இனிப்பால் செய்த விநாயகர், காய்கறிகளால் செய்த விநாயகர், நடனமாடும் விநாயகர் என வித்தியாசமாக மக்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இதில் ஒரே பகுதியில் சேர்ந்தவர்களுக்கு கடும் போட்டி நிலவும். ஒரு சில இடங்களில் யார் சிறப்பான முறையில் சிலை வைத்திருக்கிறார்கள் என கணக்கிடப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். அதுமட்டுமின்றி ஒரு சில காலனிகளில் எல்லா வீட்டிலும் இருக்கும் விநாயகர் சிலையை பூஜைக்கு பின் ஒரே இடத்தில் வைத்து வழிபடுவதும் வழக்கம்தான்.


இந்த ஆண்டு நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. உலகமே இந்தியாவை திரும்பி பார்க்கச் செய்தது சந்திரயான் 3-இன் வெற்றி. இதனை கொண்டாடும் வகையில் சென்னை கீழ்கட்டளையில் விநாயகர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் விநாயகர் சிலைக்கு அருகே சந்திரயான் 3 விண்கலத்தின் மாதிரி அமைக்கப்பட்டுள்ளது.


இது பொது மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பகுதியை கடக்கும் மக்கள் அனைவரும் இதனை வியந்து  பார்த்துச் செல்கின்றனர். இது ஒருபுறம் இருக்க சென்னை  கொருக்குப்பேட்டையில், நடிகர் விஜய் விநாயகர் சிலையை வைத்து அசத்தியுள்ளனர் ரசிகர்கள். சுமார்  1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில். விஜய் ரசிகர் மன்றம் சார்பில் கொருக்குப்பேட்டையில் வைக்கப்பட உள்ள விஜய் விநாயகர் சிலை தற்பொழுது கவனத்தை ஈர்த்துள்ளது.


கொல்கத்தாவிலிருந்து சிறப்பு கைவினைக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு. சிறந்த முறையில்  விஜய் விநாயகர் சிலையும் மற்றும் விஜயுடன் வில்லன் இருக்கும் விநாயகர் சிலைகள்  சுமார் 8 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட சிலைகள் காண்போரை ஆச்சர்யப்பட வைக்கிறது.