உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடு ஆகும். இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். மேலும் விசேஷ நாட்கள், வாரவிடுமுறை, தொடர்விடுமுறை நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டு, தொடர் விடுமுறை என்பதால் பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக அதிகாலை முதலே கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் பழனிக்கு வருகை புரிந்தனர். படிப்பாதை, யானைப்பாதை, சன்னதி வீதி, கிரிவீதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையத்திலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.தமிழ் புத்தாண்டையொட்டி பழனி முருகன் கோவில், திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.
பின்னர் 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சந்நியாசி அலங்காரம், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரமும், பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையில் வைதீகாள் அலங்காரமும் செய்யப்பட்டது. பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜ அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பின்னர் இரவு 9 மணிக்கு ராக்கால பூஜையில் பல்வேறு வண்ண மலர்களால் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மலைக்கோவிலில் உள்ள ஆனந்த விநாயகர் சன்னதியில் புத்தாண்டையொட்டி வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டது. அதேபோல் மலைக்கோவில் உட்பிரகாரம் மற்றும் பாரவேல் மண்டபம் பல்வேறு வண்ண மலர்கள், பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பழனியில் உள்ள பாதவிநாயகர் கோவில், பட்டத்து விநாயகர் கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகளை காண,ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்