நட்சத்திரங்களில் சிறப்பு வாய்ந்த நட்சத்திரங்களில் ஒன்று திருவோணம் ஆகும். நட்சத்திரங்களில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருந்தாலும் பெயரின் முன்பு திரு என்ற சிறப்பைத் தாங்கி நிற்கும் இரண்டே நட்சத்திரங்கள் திருவாதிரையும், திருவோணமும் மட்டுமே ஆகும். மாதந்தோறும் திருவோணம் நாள் வந்தாலும், ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் மிக மிக சிறப்பு வாய்ந்த நாள் ஆகும்.
திருவோண நாள் ( ஓணம் பண்டிகை)
இந்த திருவோண நாள்தான் கேரளாவில் ஓணம் பண்டிகையாக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கேரளாவை ஆண்ட மகாபலி மன்னனை சூரசம்ஹாரம் செய்த பெருமாள் வாமன அவதாரம் எடுத்ததும், மன்னிடம் 3 அடி மண் கேட்டதும் மகாபலி மன்னனை அழிப்பார். அதன்பின்பு, தன் மக்களை காண்பதற்கு வருடத்திற்கு ஒரு முறை மகாபலி மன்னன் வருவார். அந்த நாளையே கேரள மக்கள் ஓணம் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.
ஒவ்வொரு மாத திருவோண தினத்திலும் பல்வேறு சிறப்புகள் அடங்கியிருக்கிறது. உதாரணத்திற்கு மார்க்கண்டேய மகரிஷியின் மகளாக அவதரித்த பூமாதேவியை ஒப்பிலியப்பர் பெண் கேட்டு வந்தது பங்குனி மாத திருவோண தினத்தில் ஆகும். பின்னர், பூமாதேவியை ஒப்பிலியப்பர் கரம்பிடித்தது ஐப்பசி மாத திருவோண நாளில் ஆகும்.
விரதம் இருப்பது எப்படி?
இந்த திருவோண விரத நாளில் விரதம் இருப்பவர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கும். திருவோண விரத நாளில் காலையிலே நீராடி பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி மாலையை பெருமாளுக்கு அணிவிக்க வேண்டும். வசதி இருப்பவர்கள் தங்களால் முடிந்த தான, தர்ம காரியங்களை அந்த நாளில் செய்தால் வீட்டில் புகழும், செல்வமும், கல்வியும் தழைத்தோங்கும் என்று ஐதீகம்.
அதேபோல, திருவோண விரதம் இருப்பவர்கள் காலையில் துளசி தீர்த்தம் மட்டும் எடுத்துக்கொண்டு பெருமாளின் நாமமான ஓம் நமோ நாராயாணாவை கூறுவதுடன் ராமாயணம், பெருமாள் பாடல்களை படிக்க வேண்டும். மாலையில் சந்திரனை காண்பதால் சந்திர தோஷம் விலகும் என்பதும் நம்பிக்கை ஆகும்.
திருவோண விரத தினத்தில் நீங்கள் செய்யும் தானங்களையும், தர்மங்களையும் மகாவிஷ்ணுவிற்கு அர்ப்பணம் செய்ய வேண்டும். திருவோண விரதம் இருப்பதால் தோஷங்கள் விலகி நன்மையான வாழ்வு அமையும்.
திருவோண விரதம் இருப்பதால் வீட்டில் செல்வ, செழிப்புகள் பெருகி மகாலட்சுமி கடாட்ஷம் உண்டாகும் என்பதும் நம்பிக்கை ஆகும். இந்த மாதத்தில் வரும் 29-ந் தேதி திருவோண நாள்(ஓணம்) கொண்டாடப்பட உள்ளது.
மேலும் படிக்க: Aavani Month 2023: பக்தர்களே.. ஆவணி மாதம் ஏன் சிவபெருமானுக்கு அத்தனை சிறப்பு தெரியுமா..?