காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களும் தனித்தனி சிறப்பு வாய்ந்தது ஆகும். அந்த 10 அவதாரங்களில் ஒவ்வொரு அவதாரமும் தனிச்சிறப்பு வாய்ந்தவை ஆகும். அதில் மிக, மிக சிறப்பு வாய்ந்தது அவர் எடுத்த 9வது அவதாரமான கிருஷ்ண அவதாரம் ஆகும்.
கிருஷ்ண ஜெயந்தி(Krishna Jayanthi) எப்போது?
கம்சனை அழிக்க விஷ்ணு எடுத்த கிருஷ்ண அவதாரமே கிருஷ்ண ஜெயந்தி(Krishna Jayanthi) என்ற பெயரிலும், கோகுலாஷ்டமி என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டிற்கான கிருஷ்ண ஜெயந்தி வரும் 6-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டிலும் கிருஷ்ண ஜெயந்தி மிக மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
நடப்பாண்டிற்கான கிருஷ்ண ஜெயந்தி தேய்பிறை அஷ்டமியில் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்திக்கான திதி நேரம் 6-ந் தேதி இரவு 9.13 மணி முதல் மறுநாள் ( அதாவது 7-ந் தேதி) இரவு 9.14 வரை உள்ளது.
கிருஷ்ணர் அவதரித்த ரோகிணி நட்சத்திரம் என்பதால், கிருஷ்ண ஜெயந்தியன்று ரோகிணி நட்சத்திரம் மதியம் 3.24க்கு தொடங்கி மறுநாள் மதியம் 3.23க்கு முடிவடைகிறது. கிருஷ்ண ஜெயந்திக்கான திதியும், ரோகிணி நட்சத்திரமும் 7-ந் தேதியும் வந்தாலும் கிருஷ்ண ஜெயந்தியை 6-ந் தேதியே கொண்டாட வேண்டும். கிருஷ்ண ஜெயந்தியை மாலை நேரத்தில் கொண்டாடுவது சிறப்பு ஆகும்.
கிருஷ்ணர் அவதரித்த வரலாறு:
பலமிகுந்த அரக்கனான கம்சன் பல அட்டகாசங்களை செய்து கொண்டிருந்தான். அவனது துயரங்கள் தாங்காத பூமாதேவி கம்சனை அழிக்குமாறு பிரம்மாவிடம் முறையிட்டாள். அப்போது, அவர் கிருஷ்ண அவதாரம் எடுத்து மகாவிஷ்ணு கம்சனை அழிப்பார் என்று கூறினார். இதன்படி, வசுதேவருக்கும், தேவகிக்கும் 8வது குழந்தையாக பிறந்தார் கிருஷ்ணர்.
அசரிரீ தோன்றி வசுதேவர் - தேவகியின் 8வது குழந்தை கம்சனை அழிக்கும் என்று கூறியதால், கம்சன் வசுதேவர் - தேவகியை சிறைபிடித்து அவருக்கு பிறந்த முதல் 6 குழந்தைகளையும் கொலை செய்தார். 7வதாக பிறந்த குழந்தையை விஷ்ணு தன்னுடைய திருவிளையாடலால் வசுதேவரின் முதல் மனைவி ரோகிணியிடம் சேர்த்துவிட்டார். அந்த குழந்தையே பலராமன் ஆவார்.
கம்சனை அழிப்பதற்காக தேவகி வயிற்றில் கிருஷ்ணர் 8வது குழந்தையாக பிறந்தார். ஆனால், 7வது குழந்தை கலைந்துவிட்டதாக ஏற்கனவே கம்சனை நம்ப வைத்திருந்தனர். ஆவணி மாத வளர்பிறையில் அஷ்டமியும், ரோகிணி நட்சத்திரமும் கூடி இந்த நாளில் பிறந்த கிருஷ்ணர், ஆயர்குலத்தில் யசோதையிடம் கண்ணனாக வளர்ந்தார். கண்ணனாக வளர்ந்த கிருஷ்ணரின் லீலைகளும், சேட்டைகளும் எண்ணிலடங்காதவை. பெண்கள் புடைசூழ வலம் வந்த அந்த கோவர்த்தன் தக்க சமயத்தில் கம்சனை வதம் செய்தார்.
கொண்டாட்டம்:
கிருஷ்ண ஜெயந்தியன்று மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு அழகு பார்ப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது, மதங்களை கடந்து இந்து, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என பல மதத்தினரும் தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு கிருஷ்ண அவதாரமிட்டு அழகு பார்ப்பார்கள். மேலும், கிருஷ்ணர் வேடமிட்ட குழந்தைகளை வீடுகளில் நடக்கவிட்டு அவர்களின் பாதங்களை பதிய வைப்பதால், கிருஷ்ணரே தங்கள் வீட்டிற்கு வருவதாக பக்தர்கள் ஐதீகம் ஆகும்.
மேலும், பள்ளிகளுக்கும் பல குழந்தைகள் கிருஷ்ண வேடத்தில் செல்வது இயல்பாகும். தமிழ்நாட்டில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறும். வட இந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி மிக கோலாகலமாக கொண்டாடப்படும். பானைகளில் வெண்ணெயை கட்டி உறியடிப்பது போன்ற விளையாட்டுகளும் நடத்தப்படும்.