மயிலாடுதுறை அருகே பிரசித்தி பெற்ற கீழ மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த ஆறுபாதி ஊராட்சி விளநகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. அதே பகுதியில் இந்த கோயில் சேர்ந்த பழமையான கீழ மாரியம்மன் ஆலயமும் உள்ளது. இக்கோயிலில் இப்பகுதி மக்களின் வேண்டுதலை நிறைவேற்றும் தெய்வமாக விளங்குவதால் இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இந்த ஆலயத்தில் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பாபிஷேகம் 14 ஆண்டுகள் கடந்தும் நடைபெறாமல் இருந்து வந்தது. இதனை அடுத்து கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய அவ்வூர் பொதுமக்கள் மற்றும் கோயில் குலதெய்வத்தார்கள் முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் பாலாலயம் செய்யப்பட்டு, கட்டிட பணிகள், புதிய சிலை அமைத்தல், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தனர். பணிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில், கும்பாபிஷேகத்திற்கான தேதி குறிக்கப்பட்டு, பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பிகள் விடுத்த நிலையில் நேற்று 14 ஆண்டுகளுக்கு பிறகு மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அனுக்ஞை மற்றும் விக்னேஸ்வர பூஜை உடன் சிறப்பு ஹோமங்கள் கடந்த இருபதாம் தேதி முதல்கால யாகசாலை பூஜைகளுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் இன்று நிறைவுற்று மஹா பூர்ணாகுதி நடைபெற்று. பின்னர் மேள தாள வாத்தியங்கள் முழங்க யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக ஆலயத்தை சுற்றி வலம் வந்து கோபுர கலசத்தை வந்தடைந்தது. பின்பு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.