அயோத்தி ராமர் கோயில் நேற்று திறக்கப்பட்டதை அடுத்து, இன்று காலை 7 மணி முதல் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது. இதையோட்டி, நள்ளிரவு முதலே ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் குவிந்தனர். தொடர்ந்து பக்தர்கள் வருகைதர ஒருகட்டத்திற்கு மேல் கூட்டம் அதிகரித்து, ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு கோயில் உள்ளே நுழைய முயன்றனர். அங்கு இருந்த ஊழியர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றும் அவர்களின் முயற்சி தோல்வியுற ஏராளமான பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு கோயில் வளாகத்திற்குள் நுழைந்தனர்.






கூட்ட நெரிசலில் சிக்கி பலர் கீழே விழுந்து எழுந்து கோயிலுக்குள் சென்றதையும், பக்தர்கள் பலர் கைகளில் கொடிகளை ஏந்தியவாறு உள்ளே சென்றதையும் வெளியாகியுள்ள வீடியோவில் காணமுடிகிறது.


பொதுமக்கள் சுவாமி தரிசனம்:


1800 கோடி ரூபாய் செலவில் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோயிலை, பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். முக்கிய பிரமுகர்கள் மட்டும் நேற்று பங்கேற்ற நிலையில், பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், இன்று முதல் பொதுமக்கள் அயோத்தி குழந்தை ராமரை தரிசனம் செய்யலாம் என்றும் காலை 7 மணி முதல் காலை 11.30 மணி வரையும், மதியம் 2.00  மணி முதல் இரவு 7.00 மணி வரையும் அயோத்தி குழந்தை ராமரை தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜாகரன் / சிருங்கர் ஆரத்தி காலை 6.30 மணிக்கும், சந்தியா ஆரத்தி - இரவு 7:30 மணிக்கு நடைபெறும். இதற்கேற்ப உங்கள் தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.


முன்பதிவு செய்வது எப்படி?


ஆரத்திக்கான இலவச டிக்கெட்டுகள் ஆன்லைனில் மற்றும் நேரிலும் பெற்றுக் கொள்ளலாம். தரிசன செய்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு, கோயிலில் இருக்கு முகாம் அலுவலகத்தில் இலவச தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.  சரியாக அடையாள அட்டைகளை சமர்பித்து டிக்கெட்டுகளை முகாமில் பெற்றுக் கொள்ளலாம்.  ஆன்லைனில், https://srjbtkshetra.org/  என்ற இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், இதுவரை இந்த வசதி தொடங்கப்படவில்லை. ஒரிரு நாட்களில் இந்த  இணையத்தில் முன்பதிவு செய்யலாம் என்றும், பொதுமக்கள் நன்கொடையும் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் பே போன்ற அனைத்து யுபிஐ ஆப்ஸ் மூலமாக நன்கொடைகளை வழங்கலாம்.  பக்தர்கள் தங்களது நுழைவுச் சீட்டுகளின் இருக்கும் QR குறியீட்டை காண்பித்த பிறகு தான் கோயிலுக்குள்  அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.