குளித்தலை அருகில் கணக்கப்பிள்ளையூரில்  ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.


 




கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கணக்கப்பிள்ளையூரில் ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ கருப்பண்ணசாமி ஆகிய தெய்வங்கள் அடங்கிய கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை புனரமைத்து கும்பாபிஷேக விழா செய்வது என்று பொதுமக்கள் விழா கமிட்டியினர் முடிவு எடுத்து புணரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தற்போது புனரமைப்பு  பணிகள் நிறைவடைந்ததை அடுத்து கும்பாபிஷேக விழா  வெகு விமரிசையாக நடைபெற்றது.


 


 




முன்னதாக கடந்த ஜனவரி 18 ஆம் தேதி குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது. புனித நீர் அடங்கிய கும்பத்தினை சிவாச்சாரியார்கள் யாக வேண்டி சாலையில் வைத்து மகா கணபதி பூஜை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, ரக்க்ஷா பந்தனம், திரவ்யாஹூதி பூர்ணாஹூதி, மகா தீபாரதனை உள்ளிட்ட 4 கால யாக வேள்வி பூஜைகளை செய்தனர். 4-ம் கால யாக வேள்வி பூஜை  நிறை வடைந்ததும்   சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கும்பத்தினை  மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர்.


 


 




வானில் கருட பகவான் வட்டமிட்டதை அடுத்து வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீரை கலசத்திற்கு ஊற்றினர். கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் மகா மாரியம்மன், விநாயகர், முருகன், கருப்பண்ணசுவாமி  மூலவர் சிலைகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் கணக்கப்பிள்ளையூர் பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் விழா கமிட்டியினர் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.