மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற குமரக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில்  வள்ளி, தேவசேனா உடனாகிய குமரப் பெருமான் எழுந்துருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். இக்கோயிலில் அசுரனை சம்ஹாரம் செய்ய முருகப்பெருமான் திருச்செந்தூர் சென்றபோது, மாலைப் பொழுது இருள் வந்து விட்டதால் இந்திரன் அமைத்த இக்கோயிலில் தங்கி மறுநாள் சூரிய உதயம் ஆனதும் குமரக் கடவுள், தாம் வீற்றிந்தருளிய  கோயிலில் எதிரே தடாகம் அமைக்க செய்து கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்களை அதில் வரவித்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த பின்  பிரமபுரீஸ்வரர் கோயிலுக்கு சென்று பெருமானை வழிபாடு செய்தார். 




குமரனே கோயில் கட்ட ஆணையிட்டு அங்கு தானே தங்கியதால் இக்கோயில் குமரக்கோட்டம் என புராணங்கள் கூறுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற கோயிலுக்கு 36 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று  கும்பாபிஷேகம் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த நான்காம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. தொடர்ந்து இன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, காலை 9 மணிக்கு பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.




இதனைத்தொடர்ந்து, யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க கோயிலை வலம் வந்து விமானத்தை வந்து அடைந்தது. பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத, தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள், சுவிட்சர்லாந்து விஷ்ணு துர்க்கை கோயில் பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சரஹணபவ சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் புனித நீரை கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.




கும்பாபிஷேகத்தில் ஆடிட்டர் குரு சம்பத்குமார், டாக்டர் முத்துக்குமார், இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ், நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, திமுக நகர பொருளாளர் சங்கர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக வர்ணனைகளை பாஜக மாவட்ட  பிரச்சார அணி தலைவர் அழகிரிசாமி, டாக்டர் சரவணன் ஆகியோர் செய்தனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.




மயிலாடுதுறையில் சேந்தங்குடி செல்வ விநாயகர் மற்றும் பாலதண்டாயுதபாணி கோயிலில் மகா கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்


மயிலாடுதுறை சேந்தங்குடி ஜோதி நகரில் பிரசித்தி பெற்ற செல்வ விநாயகர் மற்றும் பாலதண்டாயுதபாணி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமானது நேற்று விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 2 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று பூர்ணாஹூதி தீபாராதனை செய்யப்பட்டது. கும்பாபிஷேக தினமான இன்று காலை 2ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. பூஜையின் முடிவில், மகா பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. 




தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலைச் சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மேள தாளங்கள் ஒலிக்க மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.