தமிழர்களின் கட்டிடக்கலைக்கு பெருமை சேர்க்கும் தஞ்சை பெரிய கோயிலில் ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேக விழா நடப்பது வழக்கம். அந்த வகையில் இன்று அன்னாபிஷேக விழா நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.


உலக உயிர்களுக்கெல்லாம் ஆதாரமாக விளங்குவது அன்னம். ‘அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ' என்று குறிப்பிடுகிறது சாமவேதம். இதன் பொருள் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருக்கிறார் என்பதாகும். அதனால்தான் சகல தானங்களிலும் உயர்ந்தது அன்னதானம் என்கிறது சாஸ்திரம். அப்படிப்பட்ட உயர்வான அன்னத்தை ஈசனின் திருமேனியில் முழுமையாக சாத்தி வழிபடும் நாளே அன்னாபிஷேகத் திருநாள்.


தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து ஏராளமான வெற்றிகளை குவித்தவர் மாமன்னன் ராஜராஜ சோழன். உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு கட்டிடக்கலையில் வானுயுர தமிழர்களின் பெருமைய உயர்த்தும் வகையில் பெரிய கோவிலை எழுப்பியவர் மாமன்னன் ராஜராஜ சோழன். மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோயில் உலகப்புகழ் பெற்றுத் திகழ்வதுடன், உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பின்னரும் வானுயர்ந்து நிற்கும் விமான கோபுரத்துடன் அழகுறக் காட்சியளிக்கிறது.



இந்த கோவிலின் கட்டுமானம் குறித்து உலக கட்டிக்கலை வல்லுநர்கள் இப்போதும் வியந்து பேசுகின்றனர். தமிழர்களின் கட்டிடக்–கலைக்கு மாபெரும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. இக்கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்களும், சுற்றுலாப்பயணிகளும் வந்து செல்கின்றனர். மேலும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.


இந்த பெரியகோவிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத் திருமேனியாகும். 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட பீடமும், அதன்மேல் 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டு உள்ளது. இத்தகைய சிறப்பு மிக்க பெருவுடையாருக்கு ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.


அதன்படி இன்று (திங்கட்கிழமை) ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.


பின்னர் மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினர் செய்து வருகின்றனர்.


இந்த அன்னாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேக விழா இன்று சிறப்பாக நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.