மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ் பெற்ற அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. புராண காலத்தில், பக்த மார்க்கண்டேயர் உயிரை பறிப்பதற்காக, எமன் பாசக்கயிற்றை வீசியபோது, மார்க்கண்டேயர், இங்கிருக்கும் சிவலிங்கத்தை கட்டியணைத்தார். அப்போது, இறைவன் தோன்றி, எமனை சம்ஹாரம் செய்ததாக, ஆலய வரலாறு கூறுகின்றது.
அழித்தல் தொழில் நின்று போனதால் பாரம் தாங்காத பூமா தேவியின் வேண்டுகோளுக்கு இணங்க, எமனை, சிவபெருமான் மீண்டும் உயிர்ப்பித்தார். இதனால் இங்கு, ஆயுள் சம்பந்தமான, வழிபாடுகள் 60, 80,100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் ஆயூஷ் ஹோமம் திருமணங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பதால் இவ்வாலயத்தில் ஆண்டின் 365 நாட்களும் திருமணமும், யாகங்களும் நடைபெறும் ஒரே ஸ்தலாமாகும்.
இத்தகைய பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோயிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் ஸ்ரீ அபிராமி அம்மனுக்கு ஆடிப்பூர திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஸ்ரீ அபிராமி அம்மனின் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. அதனை அடுத்து விநாயகர், அபிராமி அம்மன், சண்டிகேஸ்வரர் சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினார். பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து கொடியேற்றம் நடைபெற்றது.
விழாவில் கட்டளை தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் பூஜைகளை கணேச குருக்கள் தலைமையிலானோர் செய்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் திருக்கடையூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 21-ம் தேதி தேரோட்டம் திருவிழாவும், 22 -ம் தேதி அபிராமி அம்மன் ஆடிப்பூர தீர்த்தவாரி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளர் மணி, உள்துறை கண்காணிப்பாளர் விருதகிரி ஆகியோர் செய்து வருகின்றனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்