Sabarimala Temple: ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஜூலை 16ஆம் தேதி (நாளை) மாலை திறக்கப்படுகிறது.


சபரிமலை ஐயப்பன் கோயில்:


கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரஜோதி பூஜையை தவிர்த்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களுக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். 


கார்த்திகை மாதத்தில் மட்டும் முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும்.  மார்கழி மாதத்திலும் தை மாதத்திலும் மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். பங்குனி மாத ஆராட்டு விழாவும், சித்திரை மாத விஷூகனி காணும் விழாவும் கோயிலில் சிறப்பாக நடைபெறும்.


நாளை நடை திறப்பு:


இந்நிலையில், ஆடி மாத பூஜைக்காக கோயில் நடை நாளை மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட உள்ளது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.  நாளை நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடந்ததும் நடை அடைக்கப்படும்.  பின்னர் ஜூலை 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 5 நாட்கள் கோயிலில் வழக்கமான பூஜைகளுடன் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாரதனை, புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை நடைபெறும்.


தினசரி ஆலயத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இதனை அடுத்து, வரும் 20ஆம் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவாராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10 மணிக்கு  கோயில் நடை அடைக்கப்படும். 


யாருக்கெல்லாம் அனுமதி:


சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு செய்யும் அனைவருக்கும் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனை அடுத்து, ஆவணி மாத பூஜைக்காக ஆகஸ்ட் மாததம் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 21ஆம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோயிலில் பூஜை நடைபெறும். மேலும், கேரளாவில் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த திருவோணம் திருவிழாவிற்காக ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.