ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு பண்டிகையுமே அத்தனை சிறப்பு வாய்ந்தவை ஆகும். அதிலும் இந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.


ஆடிப்பூரம்:


ஆடி மாதத்தில் வரும் இந்த ஆடிப்பூர நட்சத்திர தினத்திலே சக்தியாகிய உமாதேவி அவதரித்ததாக சிவபுராணம் கூறுகிறது. மேலும், இதே ஆடிப்பூர நாளில்தான் ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசி மாடத்தில் பூமாதேவியே ஆண்டாளாக அவதரித்தார் என்று புராணங்கள் கூறுகிறது. இதன் காரணமாகவே, ஆடிப்பூர நாளை சைவ மற்றும் வைணவ தலங்களில் சிறப்பாகவே கொண்டாடுகின்றனர். இதே ஆடிப்பூர நாளில்தான் சித்தர்களும், முனிவர்களும் தங்களது தவத்தை தொடங்குவார்கள் என்று ஆன்மீக அறிஞர்களும் தெரிவிக்கின்றனர்.  இந்த ஆடிப்பூரமானது அம்பாளுக்குரிய நாள் ஆகும்.


என்னென்ன நன்மைகள்?


ஆடிப்பூர தினத்தில் அம்மனை வழிபடும் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். ஆடிப்பூர தினத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாளை வணங்கினால் திருமணம் ஆகி மனக்கசப்பால் பிரிந்துள்ள கணவன் மனைவிகள் மீண்டும் ஒன்று சேர்வார்கள் என நம்பப்படுகிறது


அதேபோல, ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமின்றி ஸ்ரீரங்கம் சென்று பெருமாளை வணங்கினாலும் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். தம்பதிகள் மட்டுமின்றி தொழில், வியாபார போட்டி, பண விவகாரங்கள் காரணமாக மனக்கசப்பால் பிரிந்த கூட்டாளிகள் மற்றும் நண்பர்களும் ஆடிப்பூர தினத்தில் ஆண்டாளையும், பெருமாளையும் வணங்கினால் மீண்டும் ஒன்று சேர்வார்கள் என நம்பப்படுகிறது


அதேபோல, இந்த தினத்தில் ஆலய வழிபாடு மேற்கொள்வதால் சஷ்டாஷ்டக தோஷம் இருக்கும் தம்பதியினருக்கு தோஷம் நீங்கி இல்லற வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும் என நம்பிக்கை நிலவுகிறது


வளைகாப்பு சடங்கு:


சிறப்பு வாய்ந்த ஆடிப்பூர தினத்தில் அம்பாளுக்கு வளைகாப்பு சடங்கு நடத்தப்படுகிறது. மயிலாப்பூர் கற்பகவல்லி அம்மன் கோயில், திருவாரூர் கமலாம்பாள் கோயில், நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் கோயில், திருக்கருவாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் அம்மனுக்கு ஆடிப்பூர தினத்தில் மதிய நேரத்தில் சந்தனக்காப்பு அலங்காரம் நடத்தப்படுவது வழக்கம் ஆகும்.


அன்றைய தினத்தின் இரவில் ஆயிரக்கணக்கான வளையல்கள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வளைகாப்பு சடங்கு நடத்தப்படும். இந்த வளைகாப்பு பூஜை நடந்த பிறகு, அம்மனுக்கு அலங்கரித்த வளையல்களை பிரசாதமாக பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு வழங்குவார்கள். அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு சடங்கு பூஜைக்கு வளையல் வாங்கி தந்தால் குழந்தை பேறு இல்லாத இணையருக்கு குழந்தை பேறு கிட்டும் என்பது நம்பிக்கையாக உள்ளது


ஆடிப்பூர தினத்தில் அம்மன், பெருமாள் மற்றும் ஆண்டாளை வணங்கி அனைத்து நன்மைகளையும் பெறுங்கள்.


மேலும் படிக்க: Aadi Month 2023: ஆடி மாதம் பிறந்தது எப்படி? வேப்பமரம் பூமிக்கு வந்தது எப்படி? புராணங்கள் சொல்வது இதுதான்..!


மேலும் படிக்க: Aadi Month 2023: ஆடி மாதம் எப்போது தொடக்கம்? ஆடி மாத பண்டிகைகள் என்னென்ன? எப்போது? - முழு விவரம்