மயிலாடுதுறையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற தீப்பாய்ந்தாள் அம்மன் கோயிலில் 132-ஆம் ஆண்டு தீமிதி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவிரிக்கரையில் கணவனுடன் உடன்கட்டை ஏறிய பெண்மணியை தெய்வமாக பாவித்து தீப்பாய்ந்தாள் அம்மன் என்ற பெயரில் கோயிலில் சிலைவைத்து அப்பகுதி பொதுமக்கள் நூற்றாண்டுகள் கடந்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
தீப்பாய்ந்தாள் அம்மன் நினைவாக இக்கோயில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில், தீமிதி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 132 -ஆம் ஆண்டாக தீமிதி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு, காவிரி ஆற்றங்கரை நாலுகால் மண்டபத்தில் இருந்து அலகு காவடி, சக்தி கரகம் ஆகியவை ஊர்வலமாக புறப்பட்டு, மேளதாள வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியே வீதிஉலாவாக கோயிலை வந்தடைந்தன. அங்கு கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இந்த கோயிலில் வேண்டிய வரங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது இப்பகுதியில் மக்களின் பெரும் நம்பிக்கை என்பதால், ஏராளமான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிய அம்மனுக்கு நன்றி செலுத்தும் விதமாக தீமிதித்து பிராத்தனையை நிறைவேற்றினர். மேலும், இவ்விழாவில் சுற்றுவட்டார பகுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனர். தொடர்ந்து கோயில் நடைபெற்ற கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி பொதுமக்களை உற்சாகப்படுத்தியது.
நீதிபதியாக தேர்வான கூலி தொழிலாளி மகன்; காண பெற்றோர் இல்லை..கலங்கிய கண்கள்