சிவகங்கையில் சிறப்பு


சிவகங்கை மாவட்டம் திருக்கோட்டியூர் தெப்பத் திருவிழா மாசி மகத்தில் நடைபெறும். இவ்விழாவிற்கு தமிழ்நாடு முழுமையும் இருந்து இரண்டு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கூடுவார்கள் என்பது தனிச்சிறப்பு. மக்கள் வெள்ளம் காட்சியளிக்கு இந்த சிறப்புமிக்க திருவிழா குறித்து சிவங்கையில் வரலாற்று ஆய்வுகள் செய்துவரும், சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.




விளக்கு வழிபாடு


மாசி மாதம்  தெப்பத்திருவிழா, பத்து நாள் விழாவாக மிகச்  சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் இந்த விழாவின் முதன்மை தெப்ப ஓட்டம்.  இன்னொரு சிறப்பு... திருக்குளத்தில், பக்தர்களால் ஏற்றப்படும் விளக்கு. குளத்தில் விளக்கிட்டு வழிபட்டால், குலம் தழைக்கும்; சிறக்கும்; செழிக்கும் என்பதோடு  பக்தர்கள் தங்களின் குறைகள் நிறைவேறுவதற்காக, சௌமிய நாராயணப் பெருமாளை வேண்டிக் கொண்டு குளக்கரையிலிருந்து வேறு யாரோ   ஏற்றிய விளக்கை வீட்டுக்கு  எடுத்துவந்து வழிபடுவார்கள். பின்னர் அடுத்த ஆண்டில் அவர்கள் மனதில் நினைத்த செயல் நிறைவேறிய உடன் விளக்குகளைக் கொண்டு வந்து, தெப்பக்குளக் கரையில் விளக்கேற்றி வழிபடுவர். இவ்வாண்டு இவ்விழா 14.02.2024 தொடங்கி 24.02.2024 சனிக்கிழமை தெப்ப ஓட்டத்துடன் நிறைவு பெறுகிறது.




திருக்கு + ஓட்டியூர்= திருக்கோட்டியூர்.


திருக்கு என்பது மாறுபாடு, குற்றம் என பொருள்படும் கம்பராமாயணத்தில் எத்திருக்கும் கெடும் எனும் சொல் இடம் பெற்றுள்ளது. சாகா வரம் பெற்ற இரணியகசிபுவை அழிப்பதற்கு தேவர்கள் கோஷ்டியாகக் கூடி திட்டமிட்ட இடம் திருக்கோஷ்டியூர் என்று வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. திருக்கோட்டியூர் எனும் இவ்வூர் சிவகங்கை மாவட்டம், சிவகங்கை திருப்பத்தூர் வழித்தடத்தில் திருப்பத்தூருக்கு முன்னால் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வைணவர்களின் புனிதத் தலமான 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் பாண்டிய நாட்டு வைணவத் தலங்கள் 18ல் ஒன்றாகவும் விளங்குகிறது. இங்குள்ள திருமால் கோவில் மூன்றடுக்குகளைக் கொண்ட விமானத்துடன் காணப்படுகிறது, இதில் நின்ற, இருந்த,கிடந்த கோலங்கள் எழுந்தருளிவிக்கப் பெற்று வழிபாட்டுக்குரியதாக உள்ளன. மேலும் உள் நுழையும் இடத்தில் நர்த்தனக் கண்ணன் சிற்பமும் மிக அழகு பொருந்தியதாக அமைந்துள்ளது. இக்கோவிலில் யோக நரசிம்மர், இலட்சுமி நரசிம்மர்,யுத்த நரசிம்மர், சம்கார நரசிம்மர் என்று நான்கு நரசிம்மர்கள் உள்ளனர்.




கவின் பொருந்திய முருகு சிலை


இக்கோயிலின் உள்ளேயே பழமையான  முற்கால பாண்டியர் சிவன் கோவில் ஒன்றும் அமைந்துள்ளது. இங்குள்ள முருகன், நெடிய சிலையாக இருப்பதுடன் பழமையாக பார்ப்பவரின் கண்களை விட்டு அகலாது கவின் பொருந்திய முருகு சிலையாக காட்சியளிக்கிறார். சௌமிய நாராயணப் பெருமாள் கோவில், மாதவன்கோவில் என்று இக்கோவில் இன்றைய நிலையில் அழைக்கப்படுகிறது. இக்கோவில் பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என ஐந்து ஆழ்வார் பெருமக்களால்  மங்களாசனம் என வழங்கும் பாடல் பெற்ற பழமையான கோவிலாகும்.




இன்பமே சூழ்க,அனைவரும் வாழ்க.


திருக்கோட்டியூர் நம்பி எனும் பெரியவர் வாழ்ந்து வந்த இவ்வூரில் ராமானுஜர் பலகாலம் அலைந்து திரிந்து அவரிடம் தான் அரிதின் முயன்று தேடி தெரிந்து கொண்ட  திருமந்திரமான  ஓம் நமோ நாராயணா என்ற மறைபொருளை அனைவரும் நலமுடன் வாழ வீடு பேறடைய கோபுரத்தின் மேல் ஏறி உரத்த குரலில் உபதேசித்த இராமானுஜர் வரலாற்றோடு தொடர்புடையது இக்கோவில் என்பது பெருஞ் சிறப்பு. ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லவன் காலத்தினைச் சேர்ந்த  ஒன்பதாம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டுகள் உள்ளதாக பதிவுகள் உள்ளன. வட்டெழுத்தைக் கொண்ட பல கல்வெட்டுகள் இடம் பெயர்ந்து பிற்கால கட்டுமானங்களில் விரவி இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது, மேலும் அவற்றில் ஒன்று மாடக் கோவிலுக்கு மேல் ஏறிச் செல்லும் வழியில் படிக்கல்லாகக் கிடப்பதை நாம் காண முடிகிறது. கீழ் இரணிய முட்டத்தைச் சார்ந்த கன்னிக்குடி என்ற ஊரிலிருந்து பெண் ஒருத்தி திருவிளக்கு எரிப்பதற்காக கொடை கொடுத்ததை இவனது கல்வெட்டு ஒன்று கூறுவதாக பதிவுகள் உள்ளன.




கேரள சிங்கப்பெருமாள்


தாயார் சன்னதி முன் மண்டபத்தூண்  ஒன்றில் திரிபுவன சக்கரவர்த்திகள் குலசேகர பாண்டியன் கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. வீரபாண்டியன் மரக்கால், நிலம் அளக்கும் கோல் போன்ற செய்திகளும் இடம் பெற்றுள்ளன. கீழ்த்தளத்திலுள்ள பெருமாள் கேரள சிங்கப்பெருமாள் என 12 ஆம் நூற்றாண்டில் அழைக்கப்பட்டது கல்வெட்டுகள் வழி அறிய முடிகிறது, இக்கோவில் பதிமூன்றாம் நூற்றாண்டில் பிற்கால பாண்டியர் காலத்திலும் மேலும் சிறந்து விளங்கி இருந்ததையும் 13 ஆம் நூற்றாண்டில் சொக்க நாராயணப் பெருமாள் என அழைக்கப்பட்டதையும் கல்வெட்டுகள் வழி அறிய முடிகிறது.  சுந்தரபாண்டியன் காலத்தில் மார்கழி மாதத்தில் திருமொழி பாடுவதற்காக தானங்கள் அளிக்கப்பட்ட செய்தி மற்றும் வீரபாண்டியன் காலத்தில் இக்கோவிலில் ஐந்து நாட்கள் வசந்த உற்சவம் நடைபெற சடகோபன் என்பவன் ஏற்பாடு செய்திருந்த செய்திகள் கல்வெட்டில் உள்ளதாக பதிவுகள் உள்ளன. மேலும் இரெகுநாத திருமலை சேதுபதியால் கோவிலுக்கு நிலதானம்  அளிக்கப்பட்டதை குறிக்கும் கல்வெட்டு ஒன்றும் இங்குள்ள சிவன் கோவிலில் உள்ளது.




மூலிகை ஓவியங்கள்.


மாடக் கோவில்களில் உள்ள கருவறை சுவர்களில் சேதுபதி மன்னர்களது இராமலிங்க விலாசம் ஓவியம் போல கோவில் தொடர்பான சிறப்பு பொருந்திய ஓவியங்கள் மூலிகை களால்  வரையப்பட்டுள்ளன. கருவறைகள் இறைவன் இருக்கும் இடம் விடுத்து மற்ற இடங்கள் இருட்டாக உள்ளதால் இவற்றை முழுமையாக பார்க்க முடியவில்லை.




கொண்டாடப்பட வேண்டியது


திருக்கோட்டியூர் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இங்குதான் மாசி மகத் தெப்பத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது. சிவகங்கை மன்னர்களின் பிரதானியாகவும் சிறந்த ஜோதிட வல்லுநராகவும் விளங்கிய தாண்டவராயன் பிள்ளையால் கட்டி விக்கப்பெற்றதால் ஜோசியர் தெப்பக்குளம் என அழைக்கப்படுகிறது. பாண்டியர், சோழர், விஜயநகரர், மற்றும் தஞ்சை  நாயக்கர்கள், சேதுபதி அரசர்களது கல்வெட்டுகள் இங்கு உள்ளன.  இங்குள்ள வடக்கு வாசல் செல்வி அம்மன் திருக்கோயில் திருக்கோட்டியூர் பெருமாள் கோவில் தொடர்புடையதாக உள்ளது, சித்திரை மாதத்தில் இங்கு அம்மனுக்குத் திருவிழா நடைபெற்ற பின்னரே பெருமாள் திருக்கோயில் சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது. மேலும் இவ் ஊரில் உள்ள மஞ்சனிக் கூத்த அய்யனார் என்று அழைக்கப்படும் முத்தையா கோவில் பலரது குலதெய்வக் கோயிலாக உள்ளது. மேலும் சிவகங்கை அரசி காத்தமை நாச்சியாரால் தோற்றுவிக்கப்பட்ட அருள்மிகு சொக்க ஆஞ்சநேயர் மக்களின் வழிபாட்டில் உள்ளது. இராணி காத்தமை நாச்சியாரும் பனையூர் தேசிகய்யங்காரும் திருக்கோட்டியூர் கோவில் திருவிழாக்கள் தொடர்பாக செய்து கொண்ட ஒப்பந்தம் 30.05.1876 ல்  16 ரூபாய் பத்திரத்தில் எழுதப்பட்டு  மெட்ராஸ் முத்திரைத்தாள் அலுவலகத்தில் பதிவு செய்யப்பெற்றுள்ளது. நற்றிணையில் 211 ஆம் பாடலைப்பாடிய திருக்கோட்டி நல்லந்தையார் பிறந்த ஊரும் இதுவே ஆகும். தன்னகத்தே பழமையான பல வரலாற்றைச் சுமந்து கொண்டு இன்றைய நாளிலும்  சுறுசுறுப்பாய் இயங்கி வரும் இவ்வூர் என்றும் கொண்டாடப்பட வேண்டியது.