சீர்காழி அருகே 108 வைணவ திருதளங்களில் 38 -வது திவ்ய தேசமான அண்ணன் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத பிரம்மோற்சவதை அடுத்து நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து தேரை வடம்பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.


38 -வது திவ்ய தேசத்தில் புரட்டாசி மாத வழிபாடு 


இந்துகள் புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் விழாக்கள் களைக்கட்டி நடைபெறும். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் அண்ணன் பெருமாள் கோயில் ஆண்டு புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. பெருமாளின் திவ்ய தேச தலங்களாக போற்றப்படும் 108 தலங்களில் 38 -வது திவ்ய தேசம் இதுவாகும்.




கோயிலின் சிறப்புகள்


பிரசித்தி பெற்ற மிகப் பெரிய பிரார்த்தனை தலமான இங்கு, பக்தர்கள் பலர் சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி மற்றும் சதாபிஷேகம் செய்து கொள்வர். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளில் இதுவும் ஒன்று. திருவேங்கடத்தானுக்கு வெள்ளக்குளத்தான் அண்ணன் என்பது நம்பிக்கையாதலால் திருப்பதிக்கு வேண்டிக் கொண்ட வேண்டுதலை இங்கே செலுத்துவது ஒரு மரபாகவே நடைபெற்றது வருகிறது. ஆகையால் இதனை தென்திருப்பதி என்றும் கூறுவர். திருமலை திருப்பதியில் அழைக்கப்படும் அதே பெயரால் பெருமாளும், தாயாரும் அழைக்கப்படும் ஒரே திவ்ய தேச தலம் இதுவாகும்.




எம பயம் நீக்கும் திருத்தலம்


துந்துமாரன் என்ற அரசனுக்கு சுவேதன் என்ற மகன் இருந்தான். அவனுடைய ஒன்பதாவது வயதில் அகால மரணம் சம்பவிக்கும் என்று வசிஷ்ட முனிவர் கூறினார். இதைக் கேட்டு கலங்கிய மன்னன், தன் மகனைக் காப்பாற்ற ஏதேனும் வழி உள்ளதா என்று வசிஷ்ட முனிவரிடம் கேட்டார். திருநாங்கூர் என்ற ஊருக்குச் சென்று அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, அங்கு அருள்பாலிக்கும் சீனிவாசப் பெருமாளை வேண்டி தவம் இருந்தால் தகுந்த பலன் கிடைக்கும் என்று கூறினார். வசிஷ்ட முனிவர் கூறியபடி சுவேதன் அங்குள்ள குளத்துக்குச் சென்று நீராடி, முனிவர் கூறிய நரசிம்ம மிருத்யுஞ்சய மந்திரத்தை, சீனிவாசப் பெருமாள் சந்நிதி முன் அமர்ந்து கூறிவந்தான். 




ஒரு மாத காலம் சுவேதன் இந்த மந்திரத்தை கூறி வழிபட்டதன் பயனாக பெருமாள், “நரசிம்ம மந்திரத்தை தொடர்ந்து கூறியதால் நீ சிரஞ்சீவி ஆனாய். அத்துடன் எவனொருவன் இத்தலத்தில் அமர்ந்து எட்டாயிரம் முரை இம்மந்திரத்தை கூறுகிறானோ அவனுக்கு யம பயம் கிடையாது என்று அருளினார். இதனால் சுவேதன் சீரஞ்சீவித்துவம் பெற்றான். ஆகையால் இத்தலம் வைணவத் தலங்களில் எம பயம் நீக்கும் திருத்தலம் ஆகும்.




திருவெள்ளக்குளம் என்ற சொல் இத்தலத்தின் முன்புறம் அமைந்துள்ள ஸ்வேத புஷ்கரணி தீர்த்தத்தால் உண்டாயிற்று. வடமொழியில் ஸ்வேதம் என்றால் வெண்மை. எனவே ஸ்வேத புஷ்கரணி வெள்ளைக்குளமாகி, வெள்ளக்குளமாயிற்று. இத்தலத்தில் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மணவாள மாமுனிவருக்கு பெருமாள் காட்சி கொடுத்த தலம் இதுவாகும். திருமங்கை ஆழ்வார், அண்ணா என அழைத்து பாடியதால் இத்தல பெருமாள் அண்ணன் பெருமாள் என பெயர் பெற்றார். திருமங்கையாழ்வார் மணந்த குமுதவல்லியின் அவதாரத் தலமும் நீலன் என்ற பெயரில் படைத்தளபதியாக விளங்கிய திருமங்கையாழ்வாரை ஆழ்வாராக மாற்றிய தலம் இதுவாகும். ஒரு மங்கையால் ஆழ்வாராக மாறினமையால் மங்கையாழ்வாராகி திருமங்கை ஆழ்வாரானார்.




மூன்று நிலை ராஜ கோபுரங்களைக் கொண்ட இக்கோயிலின் முன்புறம் தீர்த்த குளம் அமைந்துள்ளது. ஒற்றை பிரகாரம் கொண்ட இத்தலத்தில் பெருமாள் மணவாள மாமுனி, நாச்சியார், நம்மாழ்வார், குமுதவல்லி நாச்சியார் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள். திருப்பதி கோயிலை போன்றே அமைக்கப்பட்டுள்ளதால் இதனை தென்திருப்பதி எனவும் அழைக்கின்றனர். தை மாதத்தில் திருமங்கையாழ்வார் மங்களாசாசன உற்சவம் நடத்தப்படுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக கருடசேவை உற்சவம் நடைபெறும். திருநாங்கூர் 11 திருப்பதிகளில் இருந்து பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருள்வர். 




திருத்தேராட்டம்


இத்தகைய பல்வேறு சிறப்பு வாய்ந்த கோயிலில் ஆண்டு தோறும் திருப்பதியை போன்று புரட்டாசி மாதம் 12 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் தற்போது இந்தாண்டு பிரம்மோற்சவம் நடைபெறுவதை அடுத்து கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.  தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது பின்னர் திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி பெருக்கில் கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். இதனை அடுத்து இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது.