மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த நீடூர் வேயுறுதோளியம்மை உடனுறை சோமநாதசுவாமி திருக்கோயிலில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா வருகின்ற மார்ச் 27 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இறைவன் சுயம்புவாக அருள்பாலிக்கும் திருவாரூர், சிறுகுடி, திருக்கொண்டீச்சுரம், திருப்புன்கூர், கேதாரம், காளகஸ்தி, புதுச்சேரி, பந்தனைநல்லூர் உள்ளிட்ட சிவதலங்களின் வரிசையில் நீடூர் முக்கிய தலமாக விளங்குகிறது.
முதல் யுகத்தில் இந்திரனும், இரண்டாம் யுகத்தில் சூரியனும், மூன்றாம் யுகத்தில் பத்தரகாளியும், நான்காம் யுகத்தில் நண்டும் பூசித்த சிறப்புக்குரிய தலம். சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற சிறப்புடையது இந்தலமாகும். தன் தொழிலில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு சிவனடியார்களுக்கு அறுசுவை விருந்தளித்து வாழ்ந்த முனையடுவார் நாயனார் அவதரித்த இடமான இங்கு அவருக்கு கோயிலில் தனி சன்னதி உள்ளது. இக்கோயிலின் பழம் பெருமைகள் வடமலை நாரணக்குடை மன்னர் என்பவரால் இயற்றப்பட்ட திருநீடூர் தலபுராணம் என்ற நூலில் விளக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற மார்ச் 27-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி நீடூர் செங்கழுநீர் ஓடையில் இருந்து சிவனடியார் ஊர்வலத்துடன், யானை, குதிரை, ஒட்டகம் ஆகிய மங்கன சின்னங்கள் முன் செல்ல புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. சூரியனார்கோயில் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இதில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேக விழாவிற்கான புனிதநீரை தலையில் சுமந்தும் முளைப்பாரி எடுத்தும் பக்தி பரவசமாக ஊர்வலமாக வந்தனர்.
கச்சத் தீவில் புத்தர் சிலை’ புனித அந்தோணியர் ஆலய விழாவை முடக்கும் முயற்சியா..?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்