கச்சத்தீவில் சிங்கள ராணுவத்தினர் திடீரென புத்தர் சிலையை நிறுவியிருப்பது தமிழர்கள் மத்தியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.



புனித அந்தோணியர் ஆலயம்


 இலங்கைக்கு விட்டுக் கொடுத்த இந்தியா


தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக, ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்த கச்சத்தீவை கடந்த 1974ஆம் ஆண்டு இந்திய அரசு இலங்கைக்கு விட்டுக்கொடுத்தது. அதன்பிறகு, கச்சத்தீவு மீதான முழு உரிமையை இலங்கை அரசு எடுத்துக்கொண்டது.


தொடரும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்


மன்னர் வளைகுடாவில் ராமேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும் இடையே கடலின் நடுவில் 27 ஏக்கரில் உள்ள கச்சத்தீவு பரந்து விரிந்துள்ளது கச்சத்தீவு. இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தவரை, தமிழக மீனவர்கள் தாராளமாக அந்த பகுதி வரை சென்று மீன்களை பிடித்து வர அனுமதிக்கப்பட்டனர். ஆனால், 1974ஆம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா விட்டுக்கொடுத்த பிறகு, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மீது பெரிய அடி விழுந்தது. எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக அன்று முதல் இன்று வரை தமிழக மீனவர்களும் அவர்களது படகுகளும் தொடர்ந்து இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு வருவது வாடிக்கையாக இருக்கிறது.


தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுப்பதற்கும் அவர்கள் மீதான கைது நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் கச்சத்தீவை இலங்கை அரசிடமிருந்து மீண்டும் மீட்பதே ஒரே வழி என தமிழக அரசியல் கட்சியினர் அன்று முதல் இன்று வரை குரல் கொடுத்து வருகின்றனர்.



புதிதாக நிறுவப்பட்ட புத்தர் சிலை


புதிதாக முளைத்த புத்தர் சிலை


இந்நிலையில், புனித அந்தோணியார் ஆலயம் மட்டுமே அமைந்திருந்த கச்சத்தீவு பகுதியில், புதிதாக இரண்டு புத்தர் சிலைகளை இலங்கை ராணுவம் திடீரென அமைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


கச்சத்தீவு பகுதி இலங்கை அரசிடம் இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் அந்தோணியார் ஆலய திருவிழாவில் இருநாட்டு மீனவர்களும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற அந்தோணிய ஆலய திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்று திரும்பிய நிலையில், புதிதாக புத்தர் சிலைகளை இலங்கை கடற்படை நிறுவியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


 மத ரீதியிலான மோதலை ஏற்படுத்தும் முயற்சி ? 


கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலயத்திற்கு அனைத்து மதத்தினரும் வந்து வழிபாடு செய்துவிட்டு செல்லும் நிலையில், புதிதாக புத்தர் சிலைகளை நிறுவியுள்ளது மத மோதலை ஏற்படுத்தும் முயற்சியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதோடு, வரும் காலங்களில் அந்தோணியார் ஆலய விழாவை முடக்கும் முயற்சி இது என தமிழக மீனவர்கள் கருதுகின்றனர்.


நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்த இலங்கை எம்.பி 


கச்சதீவில் புத்தர் சிலைகளை நிறுவிய இலங்கை கடற்படைக்கு இலங்கை நாடாளுமன்ற எம்.பி சார்லஸ் நிர்மல்நாதன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய அவர், கச்சத்தீவு திருவிழாவிற்கு வந்து சென்ற இந்திய, தமிழக நண்பர்களுக்கு புத்தர் சிலை நிறுவியதன் மூலம் சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்க விடயம் என்றும் இலங்கை கடற்படை புத்தர் சிலையை அமைக்க ஜனாதிபதி செயலகம் எப்படி அனுமதி அளித்தது என்ற கேள்வி எழுகிறது என்றும் இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



இலங்கை எம்.பி. நிர்மல்நாதன்


சுமூக உறவை சீர்குலைக்க முயற்சி?- பங்குத் தந்தை அச்சம்


கச்சத்தீவில் புத்தர் சிலைகளை நிறுவியது போன்று மற்ற மதத்தினரும் தாங்கள் வழிபடும் கடவுளர்கள் சிலைகளை கச்சத்தீவில் நிறுவ முயன்றால் இனி வரும் காலங்களில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா முறையாக நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது என்றும், இது மற்ற மதத்தினர் இடையே இருக்கும் சுமூக உறவை சீர்குலைக்கும் முயற்சி எனவும் ராமநாதபுரம் வேர்கோடு பங்குத்தந்தை தேவசகாயம் அச்சம் தெரிவித்துள்ளார்.


பவுத்த மதத்தை திணிக்கும் முயற்சி – நெடுந்தீவு பங்குத்தந்தை பகிரங்க புகார்


வடகிழக்கு இலங்கையில் பவுத்த திணிப்பை செய்துக்கொண்டிருப்பதன் ஒரு பகுதிதான் கச்சதீவில் புத்தர் சிலையை இலங்கை கடற்படை நிறுவியுள்ளது என்று நெடுந்தீவு பங்குத்தந்தை வசந்தம் பகிரங்க புகார் தெரிவித்துள்ளார். போருக்கு பிறகு இன ஒற்றுமையை பற்றியான மிகப்பெரிய முன்னெடுப்பு எடுக்கப்பட்டு வரும் சூழலில், இதுபோன்ற செயல்பாடுகள் மீண்டும் பிரிவினையைதான் உண்டு செய்யும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.



மருத்துவர் இராமதாஸ்


 மதநல்லிணத்தை குலைக்கும் செயலை தடுக்க வேண்டும்  - ராமதாஸ்


 கச்சத்தீவில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சத்தீவில் மிகப்பெரிய புத்தர் சிலையை சிங்களக் கடற்படை அமைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.  மேலும், புத்தர் சிலை அமைக்கப்பட்டிருப்பது கச்சத்தீவை சிங்களமயமாக்கும் செயல் என்றும் புத்தர் கோயிலுக்கு ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்பட்டால் அது தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் இது  மத நல்லிணக்கத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை  ஏற்படுத்தும் என்றும் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், இந்த விவகாரத்தில் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.