மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். கொல்கத்தாவின் காளிகாட்டில் உள்ள மம்தா பானர்ஜி இல்லத்தில் குமாரசாமி அவரை சந்தித்தார். 


இதனைத்தொடர்ந்து,  “வரவிருக்கும் கர்நாடக சட்டசபை தேர்தல், பஞ்ச ரத்னா யாத்திரையின் வெற்றி மற்றும் தேசிய அரசியல் முன்னேற்றங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம்" என்று குமாரசாமி ட்வீட் செய்துள்ளார்.




இது குறித்து குமாரசாமி கூறுகையில் ”தேசிய அரசியலில் ஜேடிஎஸ் உடன் இணைந்து செயல்படுவது குறித்து திரிணாமுல் மேலிடத்தில் விவாதித்தேன். அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் ஆகிய இரு கட்சிகளும் தேசிய அளவில் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை விவாதித்தோம். மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்காக பிரச்சாரம் செய்ய கர்நாடகாவிற்கு வருவதாக மேற்கு வங்க முதல்வர் கூறினார்” எனத் தெரிவித்தார்.


கர்நாடகாவில் வரும் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் மத்தியில் பாரதிய ஜனதா கட்சியை (பாஜக) எதிர்கொள்ள பல எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்க முயற்சித்து வரும் நிலையில் இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. 




கடந்த வியாழக்கிழமை மேற்கு வங்க முதல்வர்,  ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் புவனேஸ்வரில் சந்தித்து ஒரு நாள் கழித்து, குமாரசாமியுடனான மம்தாவின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. பட்நாயக்குடனான சந்திப்பின் போது, இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதையும் மம்தா வலியுறுத்தினார் என்று திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து மம்தா பானர்ஜி ட்விட்டரில் கூறுகையில் "பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவின் பிரதான இலக்காகிவிட்டனர்.  குற்றப் பின்னணி கொண்ட பாஜக தலைவர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டாலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர்களின் பேச்சுக்கு தகுதியற்றவர்கள். இன்று நாம் நமது அரசியலமைப்பு ஜனநாயகத்திற்கு ஒரு புதிய தாழ்வை பாஜகாவால் கண்டுவிட்டோம்" எனக் குறிப்பிட்டிருந்தார். 


ராகுல் காந்தியின் கைதுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திரசேகர் ராவ், மு.க.ஸ்டாலின், அரவிந்த் கெஜிவால், சரத் யாதவ், உத்தவ் தாக்கரே மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோர் பாஜக தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.