மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கொள்ளிடத்தை அடுத்த தீவு கிராமம் கொடியம்பாளையம். அங்கு வசிக்கும் மக்களின் பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அதிகாலை அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். செல்லும் போது கடற்கரை ஓரம் மணலில் மூன்று சிலைகள் கிடந்துள்ளது. அதனை கண்ட மீனவர்கள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் புதுப்பட்டினம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் உடனடியாக சம்பவம் இடத்திற்கு புதுப்பட்டினம் காவல்துறையினர் மற்றும் சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் நேரில் சென்று இரண்டு பெருமாள் சிலைகள் மற்றும் ஒரு அம்மன் சிலை ஆகியவைகளை கைப்பற்றி எடுத்து வந்து சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர். தொடர்ந்து சிலை எவ்வாறு அங்கு வந்தது? சிலை எந்த கோயிலை சேர்ந்தது என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சூழலில் மீண்டும் இரண்டு சிலைகள் அதே கடற்கரையில் கிடப்பதாக அக்கிராம மக்கள் தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் பவளச்சந்திரன் மற்றும் புதுப்பட்டிணம் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு இருந்த 3 அடி உயரத்தில் உள்ள ஒரு அம்மன் சிலை மற்றும் இரண்டடி உயரத்தில் உள்ள ஒரு அம்மன் சிலை ஆகிய இரண்டு சிலைகளையும் எடுத்து வந்து சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். ஏற்கனவே மீட்கப்பட்ட மூன்று சுவாமி சிலைகள் குறித்து நடைபெற்ற விசாரணையில் சிலைகள் சீனிவாச பெருமாள் , துவாரபாலகர் , சிம்மவாகனி என தெரியவந்தது, மேலும் கிடைக்கப்பெற்ற சிலைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ரவி மற்றும் காவல்துறையினர் கடற்கரை மணலில் இந்த சாமி சிலைகள் எப்படி வந்தது. யார் கொண்டு வந்து இங்கு போட்டார்கள். எதற்காக போட்டார்கள் என்றும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுவாக சிதிலமடைந்த சிலைகளை மட்டுமே கோயில்களில் பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் இங்கு எடுக்கப்பட்ட அனைத்து சாமி சிலைகளும் சிதிலம் அடையாமல் அழகாகவும் நேர்த்தியாகவும் உள்ளது. ஏன் நல்ல சாமி சிலைகளை இங்கு கொண்டு வந்து போட்டார்கள்? இதில் சிலை கடத்தல் காரர்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்