தருமபுரி அருகே 117 ஆம் ஆண்டு பெரியாண்டவர் திருவிழாவையொட்டி முப்பூசை வழங்கி கிராம மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.
தருமபுரி அடுத்த கொளகத்தூர் கே.மாரியம்மன் கோயில் கொட்டாய் பெரியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த பெரியாண்டவர் பங்காளிகள் தருமபுரி, பழைய தருமபுரி, கொளத்தூர், பெரிய குரும்பட்டி, வேப்பமரத்தூர், கல்லிக்கொட்டாய்-அத்திமாநகர், பனைகுளம், ராமேநத்தம், சின்னார்த்தனஹள்ளி, எஸ்.கொட்டாவூர், தேவர்முக்குளம், பொம்மிடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரியாண்டவர் கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான கோவில் திருவிழா ஏப்ரல் ஆறாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, பெரியாண்டவர் பங்காளிகள், கங்கணம் கட்டி கொண்டனர். நாத விழாவின் முக்கிய நாளான இன்று பெரியாண்டவருக்கு குழந்தைகளுக்கு சீர்வரிசை வழங்குவது போல 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், முரம், விசிறி, தேங்காய், பழம், மஞ்சள், குங்குமம், வாய்ப்பாடு, பென்சில், ஸ்கேல், சார்ப்னர் உள்ளிட்ட பொருட்களை வைத்து வழிபாடு நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து பெரியாண்டவருக்கு ஆடு, கோழி, பன்றி என முப்பூசைகள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு 50க்கும் மேற்பட்ட ஆடுகளை பலி கொடுத்து, தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். மேலும் பெரியாண்டவர் கோயிலுக்குட்பட்ட பங்காளிகள் ஏராளமானோர், தங்களது குழந்தைகளுக்கு சிகை நீக்கி, காதணி விழா நடத்தினர். இந்த திருவிழாவிற்கு வந்த அனைவருக்கும், நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த பெரியாண்டவர் கோயில் திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்