கர்நாடக சட்டப்பேரவை தேர்தலையொட்டி பாரதிய ஜனதா கட்சி முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 189 வேட்பாளர்களை அறிவித்து பட்டியலை வெளியிட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்குமான பொதுத்தேர்தல் வரும் மே மாதம் 10-ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. ஒருவர் பெரும்பான்மையை பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். கர்நாடகாவில் 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2.62 கோடி ஆண் வாக்காளர்களும், 2.59 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தே வாக்கு அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 13-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அனைத்து கட்சி தரப்பில் தேர்தலை சந்திக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தேர்தலை ஒட்டி பிரதமர் மோடி பல முறை கர்நாடகாவிற்கு வருகை தந்துள்ளார். அதேபோல் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் பல முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த இரண்டு கட்சிகள் மட்டுமல்லாமல் ஜனதாதளம் (எஸ்) மற்றும் ஆம் ஆத்மியும் களத்தில் இறங்குகிறது. டெல்லி, பஞ்சாப், குஜராத்தை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி கர்நாடகாவில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது.
ஆம் ஆத்மி கட்சி தரப்பில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சி தரப்பில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் 124 பேர், இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 42 பேர் என மொத்தம் 166 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி தரப்பில் 189 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த 189 பேரில் 52 பேர் புதிய முகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலை கர்நாடகா முதலமைச்சர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பல கட்சிகள் களமிறங்கினாலும் போட்டி என்பது பா.ஜ.க – காங்கிரஸ் இடையே தான். தென் இந்தியாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகாதான். இதனை தக்க வைத்துக்கொள்ள அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது அக்கட்சி. அதே வேலை இழந்த ஆட்சியை எப்படியாவது மீண்டும் கைப்பற்ற வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.