மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் சோமநாதர் சுவாமி கோயிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆலாலசுந்தரி பத்ரகாளி அம்பாள் திருக்கோயிலில் சித்திரை மாத தேர் திருவிழா மகோற்சவம் கடந்த மாதம் 25-ஆம் தேதி பந்தகால் முகூர்த்தத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து 27-ஆம் தேதி காப்பு கட்டுதல், மே 2-ஆம் தேதி பால்குடம் ஆகிய உற்சவங்கள் நடைபெற்றது. உற்சவத்தின் முக்கிய விழாவான திருத்தேர் திருவிழா நடைபெற்றது.
திருத்தேர் விழாவை முன்னிட்டு, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தேரில் எழுந்தருளச் செய்யப்பட்டார். பின்னர், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோயிலின் நான்கு மாட வீதிகளைச் சுற்றுவந்து மீண்டும் நிலையை அடைந்தது. அப்போது வழியெங்கும் பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன்பு அம்பாளுக்கு மாவிளக்கு தீபமிட்டு வழிபாடு நடத்தினர்.
குறிப்பாக தேர்வீதியில் அமைந்துள்ள இஸ்லாமிய இல்லத்தில் மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் தங்கள் வீட்டின் முன்பு வந்த தேரில் எழுந்தருளிய அம்பாளுக்கு மலர் சாற்றி, தீபாராதனை எடுத்து வழிபட்டனர். இது மத நல்லிணக்கத்துக்கு சிறந்த உதாரணமாக விளங்கியது. நாடுமுழுவதும் பல இடங்களில் சில மதவாதிகளால் மத பாகுபாடு ஏற்படுத்தி பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி ஒற்றுமையை சீர்குலைத்து வரும் இந்த சூழலில், அதுபோன்ற மதவாதிகளுக்கு சவுக்கடி தண்டனை போன்று அமைந்துள்ளது.
மேலும் இவர்களின் இந்த சூழலில் அனைத்து தரப்பு மக்களிடையே வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்த தேர் திருவிழாவில் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவை, நீடூர் கிராமவாசிகள் ஏற்பாடு சிறப்பாக செய்திருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்