ஐபிஎல் தொடரில் நேற்றைய இரு போட்டிகளின் முடிவால் புள்ளி பட்டியலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிபெற்றது. அதே நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வேளையில் கொல்கத்தா நைர் ரைடர்ஸ் அணி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கொல்கத்தா அணியின் இந்த வெற்றிமூலம் பிளே ஆஃப் வாய்ப்பை இன்னும் தக்க வைத்துள்ளது. 


ஐபிஎல் சீசனில் இதுவரை எந்தவொரு அணியும் பிளே ஆஃப்க்கு தகுதிபெறவில்லை. இதனால் இனி வரும் போட்டிகள் அனைத்தும் ஒவ்வொரு அணிக்கும் வாழ்வா? சாவா? என்ற நிலையில் இருக்கும். ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதி நான்கிற்குள் நுழைவதற்கு இன்னும் ஒரு வெற்றியே தேவை. இன்றைய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக வெற்றிபெற்றால் முதல் அணியாக பிளே ஆஃப்க்குள் நுழையும். இதே சூழலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தோல்வியை சந்தித்தால் பிளே ஆஃப் கனவு கலைந்துவிடும்.


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இன்னும் மூன்று போட்டிகள் உள்ளது. இந்த மூன்று போட்டிகளிலும் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றால் ரன்ரேட் அடிப்படையில் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்புண்டு.  தற்போது 14 புள்ளிகளுடன் உள்ளது. 


நேற்று நடந்த முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு - ரன்ரேட்டில் இருந்து + ரன்ரேட்டுக்கு சென்று புள்ளி பட்டியலில் தற்போது 5வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகளின் நிலையை பொறுத்து பெங்களூரு அணி பிளே ஆஃப் நிலைமை தெரியும். பெங்களூரு அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 


ராஜஸ்தான் ராயல்ஸ்:


மறுபுறம் பெங்களூருக்கு எதிரான தோல்வி, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் ராஜஸ்தான் ராயல்ஸின் நம்பிக்கையை உடைத்துள்ளது. தற்போது புள்ளிகள்பட்டியலில் பெங்களூரு, ராஜஸ்தான், கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 


மும்பை இந்தியன் அணி தற்போது 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இன்னும் இவர்களுக்கு இரண்டு போட்டிகள் உள்ளதால், ஏதேனும் ஒன்றில் வெற்றிபெற்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு நுழைவார்கள்.


லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:


லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 13 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளன. இந்த அணி வருகின்ற போட்டிகளில் மும்பை மற்றும் கொல்கத்தா அணியை எதிர்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களின் வெற்றியை பொறுத்தே 4வது இடத்தில் தொடர்வார்களா அல்லது வெளியேறுவார்களா என்பது தெரியும். இந்த 4வது இடத்தில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே கடுமையான மோதல் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மட்டுமே இதுவரை பிளே ஆப்பில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.