தமிழ்நாட்டில் கள்ளச் சாராயத்தை ஒழிக்க சிறப்பு படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்படுத்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று விஷ சாராயம் அருந்தி 8 பேர் உயிரிழந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

அதாவது, விழுப்புரம் மாவட்டம், மரக்கானம் அருகே கள்ளச் சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். மேலும் பலர் உயிரிழக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. அந்த கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்த 16 பேர் வாங்கி குடித்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கள்ளச்சாராயம் குடித்த 16 பேரும் முண்டியபாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழந்தனர்.

Continues below advertisement

மேலும், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், கள்ளச்சாராய வியாபாரி அமரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்த நிலையில் எக்கியார் குப்பத்தை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளர்,

இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம், திண்டிவனம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜ மூர்த்தி, மலர்விழி, மன்னாங்கட்டி என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இதை தொடர்ந்து சிகிச்சையில் இருந்த விஜயன் என்பவரும் சங்கர்  என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன், உதவி ஆய்வாளர்கள் தீபன்,சீனுவாசன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் மரியா, உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இதுவரை 202 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 203 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு 81 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், 121 பேர் சொந்த பிணையில் விடிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அதிரடி நடவடிக்கையால், 5 ஆயிரத்து 901 லிட்டர் கள்ளச்சாரயம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ஆயிரத்து 106  மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

பாண்டிச்சேரி காரைக்கால் சுற்றியுள்ள தமிழக மாவட்டங்களில்   எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டிஜிபி அலுவலக அறிக்கை வெளியிட்டது, அதில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.