மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை லால் பகதூர் சாஸ்திரி நகரில் அமைந்துள்ளது பழமையான பிரசித்தி பெற்ற மன்மத காருண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயில். இக்கோயிலின் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் குடமுழுக்கு விழா செய்ய அப்பகுதி மக்கள் முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து திருப்பணிகள் துவங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அண்மையில் திருப்பணி பணிகள் அனைத்தும் நிறைவுற்றது.
அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கான தேதி குறிக்கப்பட்டு கடந்த 3ஆம் தேதி கும்பாபிஷேக விழா விக்னேஸ்வரர் பூஜையுடன் தொடங்கியது. அன்று மாலை முதல் காலை யாகசாலை பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்ற நிலையில், இன்று காலை நடைபெற்ற நான்காம் கால யாகசாலை பூஜையில் மகாபூர்ணாஹூதி செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர், சிவாச்சாரியார்கள் யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலை சுற்றி வந்து விமானத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு மகாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்