கர்நாடகாவில் பெண் விவசாயி நேற்று தனது பண்ணையில் இருந்து 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தக்காளி திருடப்பட்டதாகக் தெரிவித்துள்ளார்.


கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தின் பேலூர் தாலுகாவிற்குட்பட்ட கோனி சோமனஹள்ளி கிராமத்தில் பெண் விவசாயியின் விவசாய வயலில் இருந்து 50 முதல் 60 தக்காளி மூட்டைகளை திருடர்கள் நேற்று முன் தினம் திருடிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெண் விவசாயி தாரிணி மற்றும் அவரது குடும்பத்தினர் இரண்டு ஏக்கர் நிலத்தில் தக்காளியை பயிரிட்டு, அடுத்த வாரம் விளைச்சலை சந்தைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தனர். தாரிணி இந்த சம்பவம் குறித்து பேசுகையில், ​ பருப்பு அறுவடையில் பெரும் நஷ்டத்தை சந்தித்த நிலையில், கடன் வாங்கி  தக்காளி பயிரிட்டதாகவும், நல்ல விளைச்சல் இருந்ததாகவும் குறிப்பிட்டார். அதிர்ஷ்டவசமாக தற்போது தக்காளியின் விலையும் அதிகரித்துளது. இந்நிலையில், 50-60 தக்காளி மூட்டைகளை திருடர்கள் திருடி சென்றது மட்டுமல்லாமல், எஞ்சியிருந்த பயிரையும் அழித்துவிட்டனர் என கூறியுள்ளார்.


இதுகுறித்து தாரிணி அளித்த புகாரின் பேரில் ஹளேபீடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து ஹளேபீடு காவல் நிலைய போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “அரிக்கா மற்றும் இதர வணிக பயிர்கள் திருடப்பட்டது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளோம், ஆனால் இதுவரை தக்காளியை திருடியதாக கேள்விப்பட்டதில்லை. காவல் நிலையத்தில் இதுபோன்ற வழக்கு பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறை” என்றார். 


குறிப்பிடத்தக்க வகையில், மாநிலம் முழுவதும் தக்காளி விலை கணிசமாக உயர்ந்துள்ளது, பெங்களூருவில் தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ.101 முதல் 121 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஏற்பட்ட திடீர் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக தக்காளி பயிர்களில் பூச்சி தாக்குதல்கள் ஏற்பட்டு, விளைச்சல் குறைந்து, அதிக சந்தை விலைக்கு வழிவகுத்து விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  


கர்நாடகாவில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளியின் விலை  சில்லரை கடைகளில் 120 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யபடுகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, மகாரஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளி வரும். தற்போது விளைச்சல் குறைவால் வரத்து குறைந்துள்ளது என்றும் இதனால் தக்காளியின் விலை உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Instagram Threads: மஸ்கிற்கு ஆப்பு வைக்க புதிய ஆப்… மெட்டா அறிமுகப்படுத்திய இன்ஸ்டாகிராம் 'த்ரெட்ஸ்'! டிவிட்டர் போலவே இருக்குமா?


Mexico Bus Accident: பள்ளத்தாக்கில் தலைக்குப்புற கவிழ்ந்த பேருந்து; பரிதாபமாக பறிபோன 27 உயிர்கள்..