கரூர் அருகே அரசு - வேம்பு தெய்வ திருமண விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புத்தாம்பூர் ஜவுளி பூங்கா அருகே அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் வளாகத்தில் அரச மரமும், வேப்ப மரமும் அருகருகே வளா்ந்துள்ளன. அரச மரம் சிவனாகவும், வேப்ப மரம் பாா்வதியாகவும் கருதப்படுகிறது. நன்கு வளா்ந்த இரு மரங்களுக்கும் திருமணம் செய்ய, ஊா் பொதுமக்கள் முடிவு செய்தனா். சுப முகூா்த்தத்தில் மங்கள வாத்தியம் முழங்க, யாகங்கள் வளா்த்தி சிறப்பு பூஜைகள் செய்து மந்திரம் ஓதி, அரசுவுக்கும், வேம்புவுக்கும் கொங்கு நாட்டு முறைப்படி அருமைக்காரர் மூலம் தாலி கட்டி திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணத்தில் வைக்கப்படும் சீா்வரிசைகள் போல், ஏராளமான பொதுமக்கள் கொண்டு வந்த சீா்வரிசை தட்டுகள் வைத்து பக்தா்கள் வழிபாடு செய்தனா். பருவம் ஏய்திய அரசுவுக்கும், வேம்புவுக்கும் திருமணம் செய்தால், சம்பந்தப்பட்ட பகுதியில் கிரக தோஷங்கள் நீங்கி, பல்வேறு தடைகளால் திருமணம் ஆகாமல் இருக்கும் இளைஞா்கள், இளம்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். பல ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு அரசுக்கும், வேம்புக்கும் திருமணம் நடைபெறுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பக்தா்கள், பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
குளித்தலை அருகே திருச்சாப்பூரில் ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே திருச்சாப்பூரில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மகா மாரியம்மன் , ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ மலையாள சுவாமி, ஸ்ரீ மதுரைவீரன், ஸ்ரீ காத்தவராயரன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவில் அமைந்துள்ளது. கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது என்று ஊர் பொதுமக்கள் விழா கமிட்டியினர் முடிவு செய்து புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தற்போது புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த ஜூலை 4 ஆம் தேதி பெட்டவாய்த்தலை காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது. புனிதநீர் அடங்கிய கும்பத்தினை சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, ரக்சாபந்தனம், நாடி சந்தனம் திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி உள்ளிட்ட 2 கால யாக வேள்வி பூஜைகளை செய்தனர் 2ம் கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும் சிவாச்சாரியார்கள் புனிதநீர் கும்பத்தினை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுவந்தனர். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்கி கலசத்திற்கு புனித நீரினை ஊற்றி குடமுழுக்கு செய்தனர். அதனை தொடர்ந்து கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திருச்சாப்பூரை சுற்றியுள்ள திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இதில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்ய வழிபட்டார். குடமுழுக்கு விழாவிற்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.