மயிலாடுதுறை கூறைநாடு கள்ளக்குறிச்சி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் ஆண்டு தீமிதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான அக்னி கொப்பரை வீதியுலா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
ஆடி திருவிழாக்கள்
கடந்த ஜுலை 17 -ம் தேதி ஆடி மாதம் துவங்கியது, ஆடி மாதம் என்றாலே குறிப்பாக தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் திருவிழாக்கள் களைகட்ட துவங்கிவிடும், அதனைத் தொடர்ந்து பல்வேறு கோயில்களிலும் தீமிதி, காவடி எடுத்தல், பால்குட ஊர்வலம், முளைப்பாரி எடுத்தல், பொங்கல் வைத்தல் என பல்வேறு வகையான திருவிழாக்கள் கோயில்களில் நடைபெறும். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் கடந்த சில நாட்களாக திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன.
கூறைநாடு மகா மாரியம்மன் கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கூறைநாடு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கள்ளக்குறிச்சி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம். இந்த ஆலயத்தின் ஆண்டு தீமிதி திருவிழா வருகின்ற ஆகஸ்ட் 4 -ஆம் தேதி வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு கோயில் கடந்த 26 ஆம் தேதி ஆலயத்தில் காப்பு கட்டி, கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
அக்னி கொப்பரை வீதியுலா
அதனைத் தொடர்ந்து நாள்தோறும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா காட்சி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அக்னி கொப்பரை திருவிழா நடைபெற்றது. ஆலய பூசாரி மோகன் அக்னி கொப்பரையை கையில் ஏந்தியவாறு ஆலய எல்லைப் பகுதிகளை சுற்றி வீதி உலாவாக சென்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். அப்போது பக்தர்கள் பக்தி பரவசம் பொங்க அக்னி கொப்பரைக்கு அர்ச்சனை செய்து காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர்.
கோயிலில் திரண்ட பக்தர்கள்
முன்னதாக கோயிலில் திருவிழாவை முன்னிட்டு வான வேடிக்கைகள் மற்றும் தமிழர்களின் பாரம்பரிய கலையான கோலாட்ட நிகழ்ச்சிகள் உற்சாகமாக நடைபெற்றது. இவ்விழாவில் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர் .