மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அரையபுரம் கிராமத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமையான பிரசித்தி பெற்ற ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. கும்பாபிஷேக செய்ய கோயில் நிர்வாகத்தினர் முடிவெடுத்து, கட்டிடம் புணரமைப்பு, வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மஹா சம்ப்ரோஷணப் பெருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
Sarathkumar: தேர்தலில் மனைவி வெற்றிக்காக அங்கப்பிரதட்சணம் செய்த நடிகர் சரத்குமார்
யாகசாலை பூஜை
விழாவை முன்னிட்டு மூன்று கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று இன்று காலை நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோயிலை சுற்றி வந்து கோபுர கலசத்தை வந்தடைந்தது. தொடர்ந்து வேத மந்திரங்கள் ஓத, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா சம்ப்ரோஷணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கொடவிளாகம் கிராமத்தில் பசுபதீஸ்வரர், வரதராஜ பெருமாள் கோயில்களில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கொடவிளாகம் கிராமத்தில் பழமை வாய்ந்த பசுபதீஸ்வரர் கோயில் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்த கிராம மக்களால் திட்டமிடப்பட்டு, திருப்பணிகள் தொடங்கி அண்மையில் நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து கும்பாபிஷேக விழாவானது நேற்று விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் இரண்டு கால யாகசாலை பூஜைகள் மகாபூர்ணாகுதி மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் கோயிலை சுற்றி வந்து விமான கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு இரண்டு கோயில்கள் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை கண்டு தரிசனம் செய்தனர்.