Lok Sabha Election 2024 Result: பிரதமர் மோடியின் ஆட்சியின் மீது பொதுமக்களிடையே அதிருப்தி நிலவுவதாக, பொருளாதார வல்லுநர் பரகல பிரபாகர் தெரிவித்துள்ளார்.


கருத்து கணிப்புகள் போலியானவை - பரகால பிரபாகர்:


ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற “அவிநீதி சக்ரவர்த்தி நரேந்திர மோடி” எனும் புத்தக வெளியீட்டு விழாவில்,  பொருளாதார வல்லுநரும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகல பிரபாகர் பங்கேற்றார். அப்போது, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை கடுமையாக சாடி பேசினார்.


அதன்படி, ”பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசுக்கு எதிராக பொதுமக்களிடையே அதிருப்தி நிலவுகிறது. இத்தகைய சூழலில் அவர்களுக்கு ஆதரவாக வெளியாகியுள்ள கருத்து கணிப்புகள் அனைத்தும் போலியானவை” என தெரிவித்துள்ளார்.


பாஜக தில்லுமுல்லு - பரகல பிரபாகர்:


தொடர்ந்து பேசுகையில், “10 தொகுதிகள் மட்டுமே உள்ள மாநிலத்தில் 13 இடங்கள் இருப்பதாக சில கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.  வாக்கு எண்ணிக்கையின் போது தேசிய ஜனநாயக கூட்டணி மேற்கொள்ள இருக்கும்,  மோசடிக்கு உதவ வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தவறான கணிப்புகள் கூறப்பட்டுள்ளன.


கருத்து கணிப்புகளை நடத்தியதே பாஜக தலைமையிலான கூட்டணி தான். எனவே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக கருத்துக்கணிப்புகள் அமைந்துள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது அரசியல் கட்சிகள் உஷாராக இருக்க வேண்டும்” என பரகல பிரபாகர் எச்சரித்துள்ளார்.


தேர்தல் பத்திர முறைகேடு - பிரபாகர்:


மேலும், “தேர்தல் முடிந்துவிட்டதால் யாரும் ஏமாற்றமடைய தேவையில்லை. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது என்பது சுவர்களில் ஒட்டப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அதற்கு தயாராகி விட்டனர். பாஜக கூட்டணியை ஆட்சியில் இருந்து நீக்க, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளன. தேர்தல் பத்திரங்களை வெளியிடுபவர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில் அமலாக்கத்துறை வழக்குகள் மற்றும் ஜாமீன் முடிவுகள் போன்ற நீதித்துறை நடவடிக்கைகள்,  நிதி வழங்குபவர்களுக்கு ஆதரவாக கையாளப்படுகின்றன” எனவும் பாஜகவை பிரபாகர் சாடினார்.


உண்மையை பேசாத மோடி - ஷோபநாத்ரீஸ்வர ராவ்:


‘அவிநீதி சக்கரவர்த்தி நரேந்திர மோடி’ என்ற புத்தகத்தை எழுதிய ஆந்திர முன்னாள் அமைச்சர் ரஷோபநாதரீஸ்வர ராவும், நிகழ்ச்சியில் மோடியை கடுமையாக சாடி பேசினார். அதன்படி, “பிரதமர் நரேந்திர மோடி ஒருபோதும் உண்மையைச் சொல்லவதில்லை. எனவே, அவரை நம்ப வேண்டிய அவசியமில்லை. விவசாயத் துறையை ஒழிக்க மோடி உறுதியாக இருக்கிறார். அவர் தோற்கடிக்கப்பட வேண்டும். விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன், வேலைவாய்ப்பு உத்தரவாதம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் போன்ற பல மக்களுக்கு நட்பான நடவடிக்கைகளை எடுத்தது” என ரஷோபநாதரீஸ்வர ராவ் பேசினார்.