Travel With Abp தொடரில் இன்று நாம்  மலேசியா பத்துமலை முருகன் போன்று, சென்னை அருகே 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள, நடுபழனி பாலதண்டாயுதபாணி கோயில் குறித்து பார்க்க உள்ளோம்


பத்துமலை முருகர் கோயில்


மலேசியா என்றாலே பலருக்கு நினைவுக்கு வருவது மலேசியா நாட்டிலுள்ள உயரமான பத்துமலை முருகர் கோயில் தான். திரைப்படங்களிலும் சமூக வலைதளத்திலும் மலேசியா முருகர் சிலையை நாம் பார்த்து ரசித்திருப்போம். மலேசியா முருகர் சிலையை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருப்பவர்களுக்கு,  சென்னை அருகே அற்புதமான கோயில் உள்ளது.


 





பழனி முருகர் கோயிலை பற்றி நமக்கு தெரியும், வடபழனி முருகர் கோயிலையும் நாம் அறிந்ததே, ஆனால் காஞ்சிப் பெரியவரால் பெயர் சூட்டப்பட்டத் "நடுபழனி" மரகத தண்டாயுதபாணி கோயில் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. இக்கோயிலில் தான் மலேசியா முருகர்  போலவே இருக்கும் முருகப்பெருமாளை நாம் தரிசிக்க முடியும். அதுவும் இக்கோயில் சென்னையில் இருந்து, வெறும் 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.


நடுபழனி தண்டாயுதபாணி திருக்கோயில்


சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சியை சேர்ந்த முத்துசாமி என்பவர்  வட இந்தியாவில் பல்வேறு கோயிலுக்கு யாத்திரை மேற்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாடு வந்த அவர் இப்போதைய செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள பெரும்பேர் கண்டிகை திருக்கோயிலில் 4 ஆண்டுகள் தவம் இருந்தார். ஒருநாள் அவர் கனவில் தோன்றிய முருகர்  ஒரு மலைப்பகுதியை சுட்டிக்காட்டி,  அங்கு தனக்கு கோயில் எழுப்புமாறு  ஆணையிட்டார்.




 காஞ்சி பெரியவர் செய்த செயல்


முருகன் சுட்டிக்காட்டிய மலையில்  சிறிய கொட்டகை அமைத்து,  முருகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. முருகனின் அருளால் முருகரின் பெருமை  பல்வேறு ஊர்களுக்கு வர தொடங்கியது. ஊர் மக்களும் தாமாக முன்வந்து கோயிலுக்கு நன்கொடைகளை  வழங்க துவங்கினர். கோயில் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, இந்த சமயத்தில் காஞ்சிப் பெரியவர் ஒருமுறை வருகை தந்தார். அவருக்கு இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமான், பழனி பாலதண்டாயுத பாணியாகவே காட்சி தர,  இக்கோயில் இருந்த இடத்திற்கு நடுப்பழனி என பெயரிட்டார். தொடர்ந்து இங்கு மரகத சிலையாக பாலதண்டாயுதபாணி சிலை வடிவமைக்கப்பட்டு 1993 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.




 45 அடி உயர சிலை


இம்மலையின் மேற்கு அடிவாரத்தில் 45 அடி உயர முருகன் சிலை, மலேசிய பத்துமலை முருகன் சிலையைப் போல அமைக்கப்பட்டுள்ளது. சுற்றி மலைத்தொடருக்கு நடுவே சிலை அமைந்திருக்கும் காட்சியை பார்க்கவே கண் கோடிகள் வேண்டும்.  இயற்கை சூழலில் அமைந்திருக்கும் இந்த கோயிலை நிச்சயம் ஒரு நாள் நேரில் சென்று தரிசிக்கலாம். சென்னை அருகே ஒரு நாள் செலவிட, அதுவும் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் கோயிலாக இருக்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு,  நிச்சயம் இக்கோயில்  புதுவித அனுபவத்தையே கொடுக்கும்




அமைவிடம்


செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே இக்கோயில் அமைந்துள்ளது. மேல்மருவத்தூரில் இருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்தில்  இக்கோயில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து வருபவர்கள் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக மேல்மருவத்தூர் வந்தடைந்து, அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இடது புறத்தில் சாலை பயணம் செய்தால் 5 கிலோமீட்டர் தூரத்தில் இக்கோயிலை அடையலாம்.  மேல்மருவத்தூரில் இருந்து  ஆட்டோவிலும் பயணிக்கலாம்.