ஆங்கில புத்தாண்டான 2024 -ம் ஆண்டு பிறப்பை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி கோயில்களில் மக்கள் புத்தாண்டு சிறப்பு தரிசனத்துக்காக அலை மோதினார்கள். பல்வேறு கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. புத்தாண்டில் இன்று சாமி தரிசனம் செய்வதற்காக நள்ளிரவு முதலே கோயிலில் பக்தர்கள் திரண்டனர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அதிக அளவில் காணப்பட்டனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்து இந்தாண்டு தங்கள் எண்ணங்களும் விருப்பங்களும் நிறைவேற மனமுருகி வேண்டிக் கொண்டனர்.
அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோயில் ஒன்றியம் மேலையூரை அடுத்த கஞ்சாநகரம் கிராமத்தில் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு நோய் தீர வேண்டியும், வேண்டிய காரியங்கள் வெற்றி பெற வேண்டியும் 51 ஆண்டுகளாக பக்தர்கள் வினோத வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இந்து மத வழிபாடு போன்று அந்தோணியார் ஆலயத்திற்கு எதிரே உள்ள ஊர் பொது குளத்தில் பக்தர்கள் நீராடி விட்டு 500 மீட்டர் தொலைவில் உள்ள அந்தோனியார் ஆலயத்திற்கு அங்கப் பிரதட்சணம் செய்தும், முட்டி போட்டு கையில் மெழுகுவர்த்திகளை ஏந்தி தீபம் அணையாமல் ஆலயம் வரை முட்டியால் நடந்தும், தீச்சட்டிகளை கையில் ஏந்தியும் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். அந்த வகையில் இன்று புத்தாண்டு ஆண்டும் பிறந்ததை அடுத்து ஏராளமான பக்தர்கள் நூதன முறையில் வழிபாட்டில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி பூஜை செய்யப்பட்டது.
புத்தாண்டை முன்னிட்டு மயிலாடுதுறை அத்தி வரதர் எனப்படும் கோழி குத்தி வானமுட்டி பெருமாள் ஆலயத்தில், சுவாமிக்கு சொர்ண அபிஷேகம் செய்யப்பட்டது திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த சோழம்பேட்டை ஊராட்சியில் கோழிகுத்தி என்ற இடத்தில் மிகப் பழமை வாய்ந்த 16 அடி உயரத்தில் ஒரே அத்தி மரத்தால் செய்யப்பட்ட வானமுட்டி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையின் அத்திவரதர் என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு சொர்ண அபிஷேகம் செய்யப்பட்டது.
மேலும் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதுபோல் மயிலாடுதுறை நகரில் புகழ்பெற்ற வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகருக்கு தங்க காப்பும், உற்சவருக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு தீபாரதனை செய்யப்பட்டது. இதில் மயிலாடுதுறையை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டையொட்டி வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு கோயில்களில் குடும்பத்தினருடன் பொதுமக்கள் சாமி தரிசனம்.
ஆங்கில புத்தாண்டு இன்று பிறந்துள்ளது முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த நவக்கிரகங்களில் செவ்வாய் ஸ்தலமான தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு திரளான பக்தர்கள் வருகை புரிந்தனர். புத்தாண்டு யொட்டி பலர் தங்கள் குடும்பத்தினருடன் கோயிலுக்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆதி வைத்தியநாத சுவாமி, வைத்தியநாதர்- தையல்நாயகி அம்மன் , கற்பக விநாயகர், செல்வமுத்துக்குமார சுவாமி, ஆகிய அம்மன் அங்காரகன் ஆகிய சுவாமி சன்னதிகளில் நெய் தீபங்கள் ஏற்றியும், தங்களது குடும்பங்களின் பெயர்களில் அர்ச்சனைகள் செய்தும் வழிபட்டு செல்கின்றனர்.
இதேபோல் சீர்காழி அருகே உள்ள புதன் ஸ்தலமான பிர்ம்ம வித்யாம்பியகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வர சுவாமி கோயிலிலும் ஆங்கில புத்தாண்டு ஒட்டி காலை முதலே பக்தர்கள் கூட்டமும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம், சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் என அதிகளவு பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலில் உள்ள முக்குளங்களில் சில பக்தர்கள் நீராடி சுவாமிகளை தரிசனம் செய்து செல்கின்றனர்.