தஞ்சாவூர்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோயில்கள், பேராலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதிகாலை சிறப்பு பூஜையிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மக்கள் நீண்ட வரிசையில் நின்று 2024ஆம் ஆண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும் என்ற விருப்பத்துடன் வழிபாடு மேற்கொண்டனர்.
 
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்கள், பேராலயங்களில் நேற்று அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோயிலில் நேற்று காலை கோயில் நடை திறக்கப்பட்டு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. காலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


இதே போல் பிரசித்தி பெற்ற தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்கோயிலில் இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. காலை முதலே பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்ப ட்டிருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மாரியம்மனை தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு நல்ல ஆண்டாக அமைய வேண்டும் என மனமுருகி வேண்டிக்கொண்டனர்.




மேலும் வல்லம் ஏகௌரியம்மன்கோயில், தஞ்சை கரந்தை கோடியம்மன் கோயில், பூக்காரத் தெரு சுப்பிரமணியர் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதேபோல் கும்பகோணத்தில் உள்ள கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். காலை முதல் பக்தர்கள் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து சென்றுக் கொண்டிருந்தனர். இதேபோல் பிற மாவட்டம், மாநிலத்திலிருந்தும் சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல கோயில்களிலும் சுவாமி தரிசனம் செய்தனர்.


2023-ம் ஆண்டு நள்ளிரவு 12 மணிக்கு பிறந்ததையடுத்து, தஞ்சாவூர் மேரீஸ் கார்னரில் உள்ள திருஇருதய ஆண்டவர் பேராலயத்தில் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து புத்தாண்டு பிறந்தவுடன் பங்கு மக்கள் கைத்தட்டி மகிழ்ந்ததுடன், ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகள் பரிமாறிக் கொண்டனர். அப்போது வானில் வண்ண பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
 
இதேபோல புதுக்கோட்டை சாலையில் உள்ள குழந்தை இயேசு ஆலயம், சிவகங்கை பூங்கா வளாகத்தில் உள்ள கோட்டை கிறிஸ்துநாதர் ஆலயம், மகர்நோன்புசாவடி தூய பேதுரு ஆலயம், அந்தோணியார் ஆலயம், மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயம், மாதாகோட்டை ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நேற்று முன்தினம் நள்ளிரவு நடைபெற்றது.


இதேபோல் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா பேராலய வளாகத்தில் புத்தாண்டை பிறப்பை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததை அறிவித்ததும், சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.இதில் ஆயிரக்கணக்கான பங்கு மக்ள் கலந்து கொண்டனர். மேலும் நண்பர்கள், உறவினர் என அனைவருக்கும் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.