பெருமாளின் 108 திவ்யதேசங்களில் 24-வது திவ்ய தேசமான சீர்காழி ஸ்ரீ திருவிக்ரம நாராயணபெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
திறக்கப்பட்ட வைகுண்ட கதவுகள்
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை 11-வது நாள் வைகுண்ட ஏகாதசி என இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. வைணவர்கள் திருமாலின் இருப்பிடமாக கருதும் வைகுண்டத்தின் கதவுகள் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். குறிப்பாக பக்தர்கள் அனைவரும் ஏகாதசி தினத்தில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வை பார்த்தால், சொர்க்கத்திற்கு செல்லும் மோட்சம் கிடைக்கும். கேட்ட வரத்தையும், வேண்டிய பலன்களையும் பெருமாள் வழங்குவார் என்பது நம்பிக்கையாக இருந்தது வருகிறது. அன்றைய தினம் அனைத்து பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதிகாலையில் நடைபெற்ற விழா
இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி விழா இன்று பெருமாள் கோயில்களில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா அதிகாலை பொழுதில் நடைபெற்றது.
24-வது திவ்ய தேசம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்துவைக்கப்பட்ட பெருமாளின் 108 திவ்யதேசங்களில் 24 -வது திவ்ய ஸ்தலமான ஸ்ரீ திருவிக்ரம நாராயணபெருமாள் எனும் தாடாளன் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாளுக்கு அதிகாலை சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை நடைபெற்றது.
நவரத்தின அங்கி அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள்
தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் நவரத்தின அங்கி அலங்காரத்தில் கோயில் வசந்த மண்டபத்தில் எழுந்தருள, திருமங்கையாழ்வாரின் மங்களாசாசன பாசுரங்கள் பாடப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க ஸ்ரீதேவி, பூதேவி சமேத தாடாளன்பெருமாள் சொர்க்கவாகல் அருகே எழுந்தருளினார்.
1 அடி உயரம் கொண்ட தவிட்டு தாடாளன் பெருமாள்
அங்கு சொர்க்கவாசலுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து , தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அவ்வழியே ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன், பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆண்டுக்கு ஒருநாள் மட்டும் தரிசிக்க கூடிய பெருமாளின் வலது திருவடியையும், 1 அடி உயரம் கொண்ட தவிட்டு தாடாளன் பெருமாளையும் இன்று 1 நாள் மட்டுமே வணங்க முடியும் என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.
14 அடி உயரத்தில் ஒரே அத்திமரத்திலான கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கோழிகுத்தி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ தயாலெஷ்மி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 14 அடி உயரத்தில் ஒரே அத்தி மரத்தால் மூலவர் சிலை அமைந்துள்ள இந்த ஆலயம் பிப்பல மகரிஷிக்கு இறைவன் விஸ்வரூப தரிசனத்தில் காட்சி கொடுத்த இடமாகும். சனி கவசம் பாடப்பட்ட இந்த ஆலயத்தில் வழிபாடு செய்தால் பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட்ட கோடிஹத்தி தோஷங்கள் நீங்கும் என்பதால் இவ்வூர் கோடிஹத்தி பாப விமோசன தலம் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி கோழிகுத்தி என தற்போது அழைக்கப்படுகிறது.
பரமபத வாசல்
புகழ்பெற்ற இந்த ஆலயத்தில் இன்று வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. இதையொட்டி பரமபத வாசலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தீபாராதனை காண்பிக்கப்பட்டு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மூலவர் வானமுட்டி பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.