மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருவெண்காட்டில் இந்துசமய அறநிலையத்துறை சொந்தமான பழமைவாய்ந்த பல்வேறு சிறப்புமிக்க தேவாரப் பாடல் பெற்றதும், நவகிரகங்களில் புதனுக்குரிய தலமாகவும் விளங்கும் புகழ்பெற்ற ஸ்ரீ பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் கார்த்திகை மாத மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற பிரசித்தி பெற்ற அகோர மூர்த்தி திருவிழாவில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பால்குடம் எடுத்து வந்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.

Continues below advertisement

புதன் ஸ்தலத்தில் அகோரமூர்த்தியின் சிறப்பு

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயம், சிவபெருமானால் அருள் வழங்கப்பட்ட அஷ்ட விடங்கத் தலங்களில் ஒன்றாகவும், பிரம்ம வித்யாம்பிகை அம்பாளுடன் அருள்பாலிக்கும் புதன் பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. இக்கோவிலில் தனிச் சன்னதியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ அகோரமூர்த்தி, சிவபெருமானின் வீரச் செயல்களில் ஒன்றான அசுரனைக் கொன்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம் என்றாலும், கார்த்திகை மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை, அசுரனை வதம் செய்த நாளாகக் கருதப்படுவதால், இது மிகுந்த விசேஷமான நாளாகப் போற்றப்படுகிறது. 

இந்த சிறப்புமிக்க நாளில், வெளிமாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து பால்குடம் எடுத்தும், அபிஷேகம் செய்தும் அகோரமூர்த்தியை வழிபடுவது ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வாகும்.

Continues below advertisement

துர்கா ஸ்டாலின்  வழிபாடு 

இந்த ஆண்டு சிறப்புமிக்க அகோர மூர்த்தி திருநாளையொட்டி, இன்று டிசம்பர் 7-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் திருவெண்காடு ஆலயத்திற்கு வருகை தந்தார். முன்னதாக, கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

பின்னர், பாரம்பரிய முறைப்படி, கோவில் வளாகத்திற்குள் அமைந்துள்ள புனிதம் வாய்ந்த சூரிய தீர்த்த குளக்கரையில் இருந்து, பால்குடம் எடுத்துக்கொண்டு, பால்குடத்தை கையில் ஏந்தி கோவிலை வலம் வரத் தொடங்கினார். துர்கா ஸ்டாலின், மிகுந்த பக்தியுடனும், அமைதியுடனும் பால்குடம் சுமந்து கோயிலை சுற்றி வலம் வந்தார். அவருடன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்களும் பால்குடம் சுமந்து கோவிலைச் சுற்றியுள்ள மாட வீதிகளை வலம் வந்த பிறகு, அகோரமூர்த்தி சன்னதியை அடைந்தார்.

சிறப்பு அபிஷேகம் மற்றும் தரிசனம்

அகோரமூர்த்தி சன்னதியில், துர்கா ஸ்டாலின் கொண்டு வந்த பால்குடம் மற்றும் பக்தர்களால் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான லிட்டர் பால்கள், புனித தீர்த்தங்கள் ஆகியவை கொண்டு ஸ்ரீ அகோரமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அபிஷேகத்தின் போது அகோரமூர்த்திக்கு சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனைப் பொருட்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

அபிஷேகத்தைத் தொடர்ந்து, துர்கா ஸ்டாலின், மூலவரான ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர், ஸ்ரீ பிரம்ம வித்யாம்பிகை அம்பாள், மற்றும் கல்வி, ஞானம் வழங்கும் புதன் பகவான் சன்னதிகள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். அனைத்து பூஜைகளையும் கோவில் தலைமை குருக்களான பாபு குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் சிறப்பாகச் செய்து வைத்தனர்.

முக்கிய பிரமுகர்கள் மற்றும் பாதுகாப்பு

இந்த ஆன்மீக நிகழ்வில், துர்கா ஸ்டாலின் அவரது உறவினர்கள், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவகுமார், உதவி ஆணையர் ரவிச்சந்திரன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், முன்னாள் சீர்காழி ஒன்றியக் குழு பெருந்தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ரவி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முதல்வரின் மனைவி வருகையை முன்னிட்டு, மாவட்டக் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.